காந்தி மார்க்கெட் இயங்குவதும், இயங்காமல் போவதும் இனி உங்கள் கைகளில்தான் உள்ளது என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, வியாபாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தின் கணக்கின்படி காந்தி மார்க்கெட் உள்ளே 680 கடைகள், வெளியே 246 கடைகள் என மொத்தம் 926 கடைகள் மட்டுமே உள்ளன. ஆனால், காந்தி மார்க்கெட் உள்ளேயும், வெளியேயும் 2,000க்கும் அதிகமான கடைகள் செயல்பட்டு வருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
காந்தி மார்க்கெட்டுக்கு தினமும் சரக்கு ஏற்றி வரும் 300க்கும் அதிகமான வாகனங்களால் நேரிடும் போக்குவரத்து நெரிசல், மார்க்கெட் பகுதியில் தினமும் சேரும் குப்பைகள் ஆகிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணிகண்டத்தை அடுத்த கள்ளிக்குடியில் ரூ.77 கோடியில் 10 ஏக்கரில் பல்வேறு நவீன வசதிகளுடன் தரை மற்றும் முதல் தளத்தில் தலா 500 வீதம் மொத்தம் 1,000 கடைகளுடன் கூடிய மத்திய வணிக வளாகம் கட்டப்பட்டு, தமிழ்நாடு முதல்வர் பழனிசாமியால் 2017, செப்.5-ம் தேதி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது.
ஆனால், பல்வேறு காரணங்களைக் கூறி கள்ளிக்குடிக்குச் செல்வதை காந்தி மார்க்கெட் வியாபாரிகள் தொடர்ந்து தவிர்த்து வந்தனர்.
இதைடுத்து, வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று, அப்போதைய ஆட்சியர் கு.ராசாமணியின் உத்தரவின்பேரில் தரைத்தளத்தில் இரு கடைகளுக்கு நடுவில் இருந்த சுவர் அகற்றப்பட்டு, ஒரு கடையாக மாற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதன்மூலம் தரைத் தளத்தில் இருந்த 500 கடைகள் தற்போது 330 ஆகக் குறைக்கப்பட்டது. இதன்படி, தற்போது மத்திய வணிக வளாகத்தில் 880 கடைகள் உள்ளன. ஆனால், அதன்பிறகும் வியாபாரிகள் கள்ளிக்குடிக்குச் செல்ல மறுத்தனர்.
இதையடுத்து, முதல் கட்டமாக காந்தி மார்க்கெட் மொத்த விற்பனைக் கடைகளை கள்ளிக்குடிக்கு மாற்றும் நடவடிக்கையாக 2018, ஜூன் 30-ம் தேதி முதல் காய்கறி, பழங்கள் ஏற்றி வரும் கனரக வாகனங்கள் காந்தி மார்க்கெட் பகுதியில் நுழைய கண்டிப்பாக அனுமதிக்கப்படாது என்றும், கள்ளிக்குடி மத்திய வணிக வளாகத்துக்குக் கடைகளை மாற்றிக்கொள்ள வேளாண் விற்பனைக் குழு அலுவலக்தில் இருந்து விண்ணப்பங்களைப் பெற்று, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.
ஆனால், அப்போதும் தேசிய நெடுஞ்சாலையில் வைத்து சரக்கு இறக்கி, காந்தி மார்க்கெட் எடுத்து வந்து வியாபாரிகள் வணிகம் செய்தனரேயொழிய கள்ளிக்குடிக்குச் செல்லவில்லை.
இந்த நிலையில், கள்ளிக்குடி மார்க்கெட்டைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக காந்தி மார்க்கெட் மார்ச் 30-ம் தேதி பூட்டப்பட்டது.
இதனிடையே, காந்தி மார்க்கெட்டை நிரந்தரமாக மூடி, கள்ளிக்குடி மார்க்கெட்டை முழு பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் மற்றொரு மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், காந்தி மார்க்கெட்டைத் திறக்க இடைக்காலத் தடை விதித்தது. வியாபாரிகளோ இடைக்காலத் தடையை நீக்கி, காந்தி மார்க்கெட்டைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில், காந்தி மார்க்கெட்டைத் தற்காலிகமாகத் திறக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியதையடுத்து, 8 மாதங்களுக்குப் பிறகு காந்தி மார்க்கெட் இன்று (நவ. 27) மீண்டும் திறக்கப்பட்டது.
அங்கு மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, வியாபாரிகளிடம் கூறுகையில், "நீதிமன்ற வழிகாட்டுக் குழு காந்தி மார்க்கெட்டை ஆய்வு செய்ய விரைவில் வரவுள்ளது. அந்தக் குழு அளிக்கும் அறிக்கைதான் இறுதி. சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படக்கூடாது. டிச.1-ம் தேதி நீதிமன்றத்தில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. எனவே, மாநகராட்சி நிர்வாகம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இனிமேல் மார்க்கெட் வெளியே போனால் அதற்கு நீங்கள்தான் காரணம். காந்தி மார்க்கெட் இனி செயல்படுவதும், செயல்படாமல் போவதும் உங்கள் கையில்தான் உள்ளது" என்றார்.
முன்னதாக, காந்தி மார்க்கெட்டைத் திறக்க வந்த மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் என்.நடராஜனுக்கு வியாபாரிகள் மேளதாளம் முழங்க, பட்டாசு வெடித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். ஆளுயர பெரிய மாலைகள் அணிவித்தனர். காந்தி மார்க்கெட் பிரதான நுழைவுவாயிலில் கட்டப்பட்டிருந்த ரிப்பனை வெட்டி மார்க்கெட்டைத் திறந்து வைத்தார் அமைச்சர் நடராஜன்.
மாநகரக் காவல் ஆணையர் ஜெ.லோகநாதன், மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன், திருச்சி ஆவின் தலைவர் சி.கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தொடர்ந்து, மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் சுமார் 180 பேர் காந்தி மார்க்கெட்டைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.