நிவர் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை மூன்றாவது நாளாகப் பார்வையிடும் திமுக தலைவர் ஸ்டாலின், மயிலாப்பூர் தொகுதியில் உள்ள நொச்சி நகர் மீனவக் குடியிருப்பில் ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கினார்.
நிவர் புயல் பாதிப்பால் சென்னையில் நவ.24, 25ஆம் தேதிகளில் கனமழை பெய்தது. தென்சென்னை, புறநகர் பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டன. மீனவர்கள் வசிக்கும் காசிமேடு, நொச்சி நகர், நடுக்குப்பம் மற்றும் ஈசிஆர் சாலைகளில் உள்ள பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
மழை பாதிப்புகளை நவ 25, 26ஆம் தேதிகளில் கொளத்தூர், பெரம்பூர், சூளை, திருவிக நகர், சைதாப்பேட்டை பகுதிகளில் ஆய்வு செய்து நிவாரண உதவிகள் வழங்கிய திமுக தலைவர் ஸ்டாலின், மூன்றாவது நாளாக இன்று காலை மயிலாப்பூர் தொகுதியில் உள்ள நொச்சி நகர் மீனவக் குடியிருப்பில் ஆய்வு செய்தார்.
அப்போது மீனவ மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். மீனவர்கள் குடியிருப்பில் வசதிக் குறைபாடு, கரோனா தொற்று காரணமாக மெரினா கடற்கரை மூடியிருப்பதால் வாழ்வாதாரம் பாதிப்பு, கடற்கரை உள் வட்டச்சாலையில் மீன் விற்பனைக் கூடங்களை அமைப்பது, கடற்கரையில் வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்குவது, பேரிடர் காலங்களில் படகுகள், மீன்பிடி சாதனங்கள், வலைகளைப் பாதுகாத்து வைக்கக் கூடம் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைத் தெரிவித்தனர்.
பின்னர் பாதிக்கப்பட்ட மீனவ மக்கள், பொதுமக்களுக்குப் பால், ரொட்டி, போர்வை ஆகியவற்றை வழங்கி ஆறுதல் கூறினார். அவருடன் தென்சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மாவட்டப் பொறுப்பாளர் த.வேலு ஆகியோர் உடனிருந்தனர்.