குடியாத்தம் கவுன்டன்யா ஆற்றில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தால் பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதிகப்படியான நீர்வரத்தால் மோர்தானா அணை இன்று திறக்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் நிவர் புயல் தாக்கத்தால் நேற்று முன்தினம் (நவ.25) இரவு தொடங்கி நேற்று (நவ.26) மாலை வரை கனமழை பதிவானது. வேலூர் மாவட்டத்தின் வழியாக நிவர் புயலின் கண் பகுதி கடந்து சென்றதால் பெய்த அதிகப்படியான மழையால் ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாலாற்றின் துணை நதிகளாக இருக்கும் பொன்னை ஆறு, கவுன்டன்யா மகாநதி, அகரம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள கவுன்டன்யா வனப்பகுதியில் இருந்து உற்பத்தியாகும் கவுன்டன்யா மகாநதி குடியாத்தம் வழியாகப் பள்ளிகொண்டா அருகே பாலாற்றில் கலக்கிறது. இதன் குறுக்கே 11.57 மீட்டர் உயரமுள்ள மோர்தானா நீர்த்தேக்க அணை கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே முழுமையாக நிரம்பிவிட்டது. அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் இருந்து நீர்வரத்து இருந்ததால் அணையில் இருந்து உபரி நீர் கவுன்டன்யா ஆற்றில் வெளியேற்றப்பட்டு வந்தது. இதனால், கவுன்டன்யா ஆற்றை நம்பியுள்ள ஏரிகளுக்குத் தண்ணீர் திருப்பிவிடப்பட்டு பெரும்பாடி ஏரி, நெல்லூர்பேட்டை பெரிய ஏரி நிரம்பி வந்தது.
இதற்கிடையில், ‘நிவர்’ புயல் தாக்கத்தால் கவுன்டன்யா வனப்பகுதியில் கனமழை கொட்டியதால் நேற்று (நவ.26) பிற்பகல் முதல் அணைக்கான நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. 650 கன அடியில் இருந்து உயரத் தொடங்கிய நீர்வரத்து மாலை 5 மணியளவில் 6,750 கன அடியாகவும் மாலை 6 மணியளவில் 8,700 கன அடியாகவும் இரவு 7 மணியளவில் 10 ஆயிரம் கன அடியாகவும் இரவு 8 மணியளவில் 10,977 கன அடியாகவும் உயர்ந்தது. திடீரென உயர்ந்த நீர்வரத்தால் கவுன்டன்யா ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி வருவாய்த் துறையினர் தண்டோரா மூலம் எச்சரித்தனர்.
ஆட்சியர் ஆய்வு:
குடியாத்தம் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நேற்று (நவ.26) இரவு 10 மணியளவில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், வருவாய்க் கோட்டாட்சியர் ஷேக் மன்சூர், துணை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீதரன், வட்டாட்சியர் வத்சலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முடிவில், அனைத்துத் துறையினர் ஒருங்கிணைப்புடன் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகும் கிராமங்களில் இருந்து பொதுமக்களைப் பாதுகாப்பான முகாம்களில் தங்கவைக்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
30 ஆண்டுகளுக்குப் பிறகு பெருவெள்ளம்:
இரவு 10 மணியளவில் குடியாத்தம் பாலத்தைத் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்தத் தகவலை அடுத்து ஏராளமானவர்கள் ஆற்றுப்பாலத்தில் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல்துறையினர் உதவியுடன் நெரிசல் சரி செய்யப்பட்டது. தொடர்ந்து மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இதனை வேலூர் சரக டிஐஜி காமினி ஆய்வு செய்தார்.
கடந்த 1991-ல் கவுன்டன்யா ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாலத்தைத் தொட்டபடி வெள்ள நீர் சென்றது. கடந்த 2000-ம் ஆண்டு கவுன்டன்யா ஆற்றின் குறுக்கே மோர்தானா பகுதியில் நீர்த்தேக்கத் தடுப்பணை கட்டியதால் ஒரு சில ஆண்டுகள் மட்டும் குறைந்த அளவு தண்ணீர் சென்றது. கடந்த 30 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று மீண்டும் கவுன்டன்யா ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்ட தகவலால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதனால் ஆற்றில் இருந்து சுமார் 10 கி.மீ. சுற்றளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
11 நிவாரண முகாம்கள்:
கவுன்டன்யா ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்ததால் வருவாய்த் துறையினர், காவல்துறையினர் வீடு வீடாகச் சென்று எச்சரித்து வெளியேற்றினர். மொத்தம் 11 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு 900க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு பிஸ்கட், தண்ணீர் பாட்டில்கள், பெட்ஷீட்கள் வழங்கப்பட்டன. கவுன்டன்யா ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கைத் தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி பார்வையிட்டதுடன் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு உணவு வழங்கினார்.
மோர்தானா அணை திறப்பு:
அதிகப்படியான நீர்வரத்தால் மோர்தானா அணையின் இரண்டு கால்வாய்கள் வழியாக இன்று (நவ.27) தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி மோர்தானா அணைக்கு 9,360 கன அடி வீதம் நீர்வரத்து இருந்தது. அணைக்குத் தொடர்ந்து ஒரு மாதம் வரை நீர்வரத்து இருக்கும் என்பதால் அணையின் இரண்டு கால்வாய்களில் திறந்துவிடப்படும் தண்ணீரால் சுமார் 30க்கும் மேற்பட்ட ஏரிகள் முழுமையாக நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாலாற்றில் வெள்ளம்:
வேலூர் மாவட்டப் பாலாற்றில் அகரம் ஆறு, கவுன்டன்யா ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்து கடந்த 10 மணி நேரத்தில் சுமார் 20 கி.மீ. தொலைவுக்குப் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வேலூர் பாலாற்றில் வெள்ளம் வரும் தகவலால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆய்வு:
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உற்பத்தியாகும் நீவா நதி, தமிழகத்தில் பொன்னை ஆறாக மாறிப் பாலாற்றில் கலக்கிறது. கடந்த ஒரு மாதமாகப் பொன்னையாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் தமிழகப் பகுதியில் கட்டப்பட்டுள்ள பொன்னை தடுப்பணை முழுமையாக நிரம்பிய நிலையில், நிவர் புயலால் நேற்று (நவ.26) மாலை நீர்வரத்து 7 ஆயிரம் கன அடியைக் கடந்து பாலாற்றில் கலந்தது.
வாலாஜா அருகே பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையைக் கடந்து வெள்ள நீர் சென்றது. இதனை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் இன்று (நவ.27) ஆய்வு செய்ததுடன், பாலாறு தடுப்பணையில் இருந்து மகேந்திரவாடி ஏரிக்கு 235 கன அடியும், காவேரிப்பாக்கம் ஏரிக்கு 1495 கன அடியும், தூசி கால்வாய் வழியாக 150 கன அடியும் சக்கரமல்லூர் கால்வாய் வழியாக 95 கன அடியும் தண்ணீரைத் திறக்க உத்தரவிட்டார்.