பல்லடம் சாலையில் பெட்ரோல் ஊற்றி கணவர் மற்றும் மகள் எரித்துக் கொலை செய்யப்பட்ட தற்கு போலீஸாரின் அலட்சியமே காரணம் என்று மனைவி புகார் எழுப்பியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் பல்லடம் போலீஸார், இந்தக் கொலை தொடர்பாக 4 பேரை பிடித்து விசாரித்து வருகின் றனர்.
இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறியதாவது:
பல்லடம் வட்டம் மாணிக்காபுரம் அருகே துண்டுக்காடு கிராமத்தில் வசித்தவர் தங்கவேல்(45). இவரது மனைவி தமிழ்ச்செல்வி(38). மகள் மகாலட்சுமி(11). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். மகன் தர்ஷன்(7). கடந்த 5-ம் தேதி மாலை மகளை அழைத்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் சென்ற தங்கவேல் மீண்டும் வீடு திரும்பவில்லை என சொல்லப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் திருப்பூர் மாவட்டம் மங்கலம் - பல்லடம் சாலையில் எரிந்த நிலையில் ஆண் சடலமும், கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியில் பாதி எரிந்த நிலையில் சிறுமியின் சடலமும் கிடந்தது குறித்து, போலீஸார் விசாரணை மேற்கொண் டதில் தந்தை, மகள் எரித்துகொலை செய்யப்பட்டிருப்பது கண்டறியப் பட்டது.
இது தொடர்பாக, பல்லடம் மாணிக்காபுரம் கண்ணன் நகர் பறையக்காடு பகுதியை சேர்ந்த விசைத்தறி உரிமையாளர் செல்வம் (எ) சுப்பிரமணி(43), ராசக் கவுண்டம்பாளையம் பனமரத் தோட்டம் தெய்வசிகாமணி(39), நடுவேலம்பாளையம் நீலிக்காட்டு தோட்டம் நாகராஜ்(27), காளி பாளையம் நாதக் கவுண்டன் பாளையம் கண்டக்டர் தோட்டத் தைச் சேர்ந்த ஆனந்த்(27), கோவை வடவள்ளி பொன் காளியூரைச் சேர்ந்த ரெங்க ராஜ்(40) ஆகிய 5 பேரில், 4 பேரை போலீஸார் பிடித்துள்ளனர். இதில், ரெங்கராஜ் தலை மறைவாகியுள்ளார் என்றனர்.
விசைத்தறி உரிமையாளர் ஒருவரிடம் தங்கவேல் வேலை பார்த்து வந்ததாகவும், கடந்த ஓராண்டுக்கு முன் ரூ. 60 ஆயிரம் பணம் பெற்றுவிட்டு வேலைக்குச் செல்லாமலும், பணத்தை தராமல் இழுத்தடித்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து, கடந்த 5-ம் தேதி மாலை, அம்மாபாளையம் பிரிவு அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற தந்தை மற்றும் மகள் 2 பேரையும், காரில் கடத்திச் சென் றுள்ளனர். அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் ரூ.2 ஆயிரத் துக்கு பெட்ரோல் வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. தங்கவேலுவை மங்கலம் பகுதியில் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றுவிட்டு, மகளை வடவள்ளிக்கு அழைத்துச் சென்று பெட்ரோல் ஊற்றி கொலை செய்ததாகவும் தெரிகிறது என்றனர்.
மனைவி புகார்
தங்கவேலின் மனைவி தமிழ்ச் செல்வி இதுகுறித்து கூறும்போது, ‘கணவரையும், மகளையும் கடத் திச் சென்றதாக தகவல் கிடைத்த உடனேயே பல்லடம் போலீஸில் புகார் அளித்தோம். ஆனால் அதை பதிவு செய்யாமல் அலைக் கழித்தனர். காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு நேரடியாக புகார் தெரிவிக்க முயற்சித்ததால், நீண்ட நேரத்துக்குப் பிறகு புகாரைப் பெற்றுக் கொண்டனர். 7 மணிக்கு கடத்தல் சம்பவம் நடந்தது. இதையடுத்து தகவல் தெரிந்து காவல்நிலையம் சென்றபோது இரவு மணி 8.45. ஆனால் ஒரு மணி நேரம் தாமதமாகவே புகார் பதிவு செய்யப்பட்டது. புகாரைப் பெற்றுக் கொண்டு உடனடியாக உஷார்படுத்தியிருந்தால் இருவரை யும் காப்பாற்றியிருக்கலாம்’ என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
காவல்துறை மறுப்பு
இக்குற்றச்சாட்டு குறித்து மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் சங்கர் கூறும்போது, ‘இந்தக் குற்றச் சாட்டு முற்றிலும் தவறானது. இரவு 10 மணிக்குத்தான் போலீஸாரிடம் புகார் கூறப்பட்டுள்ளது.
உடனடியாக வழக்கை பதிவு செய்து சிறப்பு உதவி ஆய்வாளர் பச்சையப்பன், சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டுக் குச் சென்று ஆய்வு செய்தார். அங்கு அவரது மனைவி மட்டுமே இருந்தார். மீண்டும் இரவு ஒரு மணிக்கு ஆய்வு செய்தபோது சந்தேகப்படும் நபர் பிடிபட்டார்’ என்றார்.