சட்டக்கல்வி மற்றும் வழக்கறிஞர்கள் பதிவுமுறை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஏற்புடையது அல்ல என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
சட்டம் படித்து வழக்கறிஞராக பதிவு செய்துகொள்வது தொடர் பான பொதுநல வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “குற்றப்பின்னணி உள்ளவர்கள் சட்டம் பயின்று வழக்கறிஞர்களாக பதிவு செய்துகொள்கின்றனர். இதனால் நீதித்துறையே குற்றமயமாகிவிட்டது. கடந்த 30 ஆண்டுகளில் நீதித்துறை யின் நன்மதிப்புக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இப்படி வழக்கறிஞர் களாக ஆகிறவர்கள் நீதிமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள். மூன்றாண்டு சட்டக் கல்விமுறையை ரத்து செய்ய வேண்டும். 5 ஆண்டு கால சட்டப்படிப்பை கொண்டு வர சட்ட வரையறை தேவை” என்று கூறப்பட்டதாக தெரிகிறது.
இந்த தீர்ப்பில், குற்றப் பின்னணிக்கு என்ன வரையறை என்று தெரியவில்லை. ஒருவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருந் தால் அவரை குற்றப்பின்னணி உடையவர் என்று சொல்லலாம். அதே நேரத்தில், முதல் தகவல் அறிக்கை மட்டுமே பதிவு செய்திருந்தால், அவரை குற்றப்பின்னணி கொண்டவராக ஏற்க முடியாது. ஒடுக்கப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மீது பொய்யாக புகார் அளித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் அவர்கள் சட்டம் படிக்க முடியாமல் போகலாம்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடுக்கப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மீது பொய்யாக புகார் அளித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு வருகிறது.