கன்னியாகுமரி மாவட்டத்தில் போதிய நீர்இருப்பு இருந்தபோதிலும் கடைமடை பகுதிக்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர் என காணொலி மூலம் நடந்த விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் குற்றச்சாட்டு விடுக்கப்பட்டது.
அப்போது உடனடியாக கடைமடை பகுதிக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக பொதுப்பணித்துறையினர் உறுதியளித்தனர்.
கரோனாவால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பின்னர் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறவில்லை.
இந்நிலையில் விவசாயிகள் கூட்டத்தை நடத்துமாறு வேளாண் ஆர்வலர்கள் தொடர் கோரிக்கைகள் வைத்தனர். இதைத்தொடர்ந்து காணொலி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.
நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அரவிநத் தலைமையில், வருவாய் அலுலர் ரேவதி, பொதுப்பணித்துறை நீர்ஆதார செயற்பொறியாளர் வசந்தி, மற்றும் வேளாண் அலுவலர்கள் பங்கேற்று விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு காணொலி காட்சி மூலம் பதில் அளித்தனர்.
குமரி மாவட்டத்தில் உள்ள 9 வேளாண் அலுவலகத்தில் இருந்து காணொலி மூலம் விவசாயிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். குமரி மாவட்ட பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ, வேளாண் பிரதிநிதிகள் பெரியநாடார், தேவதாஸ், புலவர் செல்லப்பா, தங்கப்பன், முருகேசபிள்ளை, மற்றும் வேளாண் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், பேச்சிப்பாறை அணை தூர்வாராமல் காலம் கடத்துவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு வனத்துறையிடம் இருந்து அனுமதி பெற்று தூர்வாருவதாக பதிலளிக்கப்பட்டது. குமரி மாவட்டத்தில் தென்னை மரங்களில் பரவி வரும் விநோத நோயால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கு நடவடிக்கை தேவை என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அப்போது, கேரளாவை போன்றே அரசிடமிருந்து உரிய உத்தரவு பெற்று தென்னையை நோயிலிருந்து பாதுகாக் நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. குளங்களில் வண்டல்மண் எடுப்பதற்கு வட்டாட்சியரிடம் மனு கொடுத்து அனுமதி பெறலாம். இதற்க உடனடியாக அனுமதி வழங்கப்படும் எனவும் வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.
குமரி மாலையோர பகுதிகளில் உள்ள வேளாண் பயிர்களுக்கு, காட்டு விலங்குகளால் ஏற்படும் பாதிப்பிலிருந்து இழப்பீடு வழங்குவதுடன், பாதிப்புகளை தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. குளங்களில் மீன்வளர்த்தலுக்கான அனுமதி வழங்கவேண்டும் என்ற கோரிக்கைக்கு, இது தொடர்பாக நீதிமன்ற வழக்குகள் முடிந்து விட்டதால் பொதுப்பணித்துறை மூலம் ஏலம் விடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் போதிய தண்ணீர் இருப்பு இருந்த போதிலும் கடைவரம்பு பகுதிகளுக்கு பாசன நீர் வராததால் விவசாயிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர் என விவசாயிகள் குற்றம் சாட்டினர். இதைத்தொடர்ந்து கடைமடை பகுதிக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் உடனடியாக தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை நீர்ஆதார துறையினர் தெரிவித்தனர்.