தமிழகம்

ராமநாதபுரத்தில் ரூ.300 கோடி மோசடி: ஞானவேல்ராஜா மீதான வழக்கு விசாரணைக்கு தடை

கி.மகாராஜன்

ராமநாதபுரத்தில் ரூ.300 கோடி நிதி நிறுவன மோசடி தொடர்பாக சினிமா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சினிமா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

ராமநாதபுரத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.300 கோடி வரை மோசடி செய்ததாக நீதிமணி, மேனகா மற்றும் ஆனந்த் ஆகியோர் மீது ராமநாதபுரம் பஜார் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த மோசடி தொடர்பாக விசாரணைக்கு வருமாறு போலீஸார் எனக்கு சம்மன் அனுப்பினர்.

இதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை விசாரித்து எனக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த மோசடியில் எனக்கு தொடர்பில்லை. எனவே என் மீதான வழக்கின் விசாரணைக்கு தடை விதித்தும், வழக்கிலிருந்து என் பெயரை நீக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி நிஷாபானு முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர், ஞானவேல்ராஜா மீதான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து, மனு தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜன.21-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT