கனமழையால் புதுச்சேரியில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக பாகூர் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள 21 ஏரிகள் நிரம்பியுள்ளன.
புதுச்சேரி மாநிலம் பாகூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறியதும் பெரியதுமாக மொத்தம் 24 ஏரிகள் உள்ளன. இதில் பாகூர் ஏரி புதுச்சேரி மாநிலத்திலேயே 2-வது பெரிய ஏரியாகும். இந்த ஏரி மொத்தம் 3.60 மீட்டர் கொள்ளளவு கொண்டது.
இந்த நிலையில் நிவர் புயல் காரணமாகப் பெய்த கனமழையால் பாகூர் பகுதியில் 30 செ.மீ மழை பதிவானது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் வடிகால் வாய்க்கால் இல்லாததால் ஆங்காங்கே மழைநீர் தேங்கி வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. விவசாய நிலங்களும் நீரில் மூழ்கின.
விளைநிலங்களில் இருந்து வெளியேறும் உபரி நீர், பங்காரு வாய்க்கால் வழியாகப் பாகூர் ஏரிக்கு வருவதால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பாகூர் ஏரியின் முழு கொள்ளளவில் தற்போது 1.87 மீட்டர் தண்ணீர் நிரம்பியுள்ளது. கனமழையினால் பாகூர் ஏரிக்கரையின் தடுப்புச் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதேபோல் கரையாம்புத்தூர், பனையடிக்குப்பம், கடுவனூர் உள்ளிட்ட ஏரிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து அந்த ஏரிகளின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.
இதனால் இன்றைய (நவ.26) நிலவரப்படி பாகூரின் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள 21 ஏரிகள் நிரம்பியுள்ளன. சித்தேரி அணைக்கட்டு நிரம்பிய நிலையில் தண்ணீர் வழிந்தோடுகிறது. இந்த அணைக்கட்டின் இரண்டு மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாகத் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதேபோல் கனமழையினால் புதுச்சேரியின் பெரிய ஏரியான ஊசுட்டேரி உள்ளிட்ட நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.