மின் விநியோகத்தைப் புதுச்சேரி மின்துறையினர் விரைந்து சீரமைக்கத் தொடங்கினர். அதனால், தொகுதிவாரியாகப் படிப்படியாக மின்சார விநியோகம் தொடங்கியுள்ளது. உயிரைப் பணயம் வைத்து மின்துறை ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி அருகே நேற்று (நவ.25) இரவு நிவர் புயல் கரையைக் கடந்தது. இதனால் புதுச்சேரியில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசியது. புயல் கரையைக் கடக்கும் நேரத்தைக் கருத்தில் கொண்டு நேற்று மாலை முதல் பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. இரவு 10.30 மணியில் இருந்து பாதுகாப்புக்காக மின்சாரம் முழுவதும் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், புயல் கரையைக் கடந்த பிறகு பல பகுதிகளில் படிப்படியாக மின் விநியோகத்தைச் சீரமைத்துத் தரும் பணியில் மின்துறை ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், உப்பளம் பகுதியில் அமைந்துள்ள மின்கம்ப ஒயரின் மீது மாட்டிக்கொண்டிருந்த மரக்கிளையை மின்துறை ஊழியர் ஆபத்தான சூழ்நிலையிலும், மின்கம்பி மீது ஏறியும் அகற்றினார். போதிய பாதுகாப்பு சாதனங்கள் ஏதுமில்லாமல் உயிரைப் பணயம் வைத்து மின்கம்பிகளில் தனி ஒருவராக ஏறி மரக்கிளையை அகற்றினார். பல ஊழியர்கள் உயிரைப் பணயம் வைத்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மின்துறை உயர் அதிகாரிகள் கூறுகையில், "புயலால் பெரிய அளவில் மின்துறையில் பாதிப்பு ஏற்படவில்லை. அதேபோல், மின்கம்பங்களுக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. பாகூர், கோர்க்காடு, காலாப்பட்டு துணை மின்நிலையங்களில் பிரேக்டவுன் ஏற்பட்டிருந்ததால் மின் விநியோகத்தை உடனடியாக சீரமைத்துத் தருவதில் சிக்கல் ஏற்பட்டது. அப்பணி சீராகி வருகிறது. ஒவ்வொரு பகுதியாக மின் விநியோகம் தருகிறோம்" என்று தெரிவித்தனர்.