புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் இன்று நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கக் கூட்டமைப்பினர் 650 பேர் கைது செய்யப்பட்டனர்.
"தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மக்கள் விரோதப் போக்குடன் மத்திய அரசு நடந்து கொள்வதாகக் கூறி, அதைக் கண்டித்தும் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான புதிய வேளாண் சட்டங்களையும், பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாகத் திருத்தப்பட்ட தொழிலாளர் நலச் சட்டங்களையும், புதிய கல்விக் கொள்கையையும் திரும்பப் பெற வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கக் கூடாது" என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்துக்குப் பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.
இதன்படி, திருச்சி கன்டோன்மென்ட் ஒத்தக்கடை பகுதியில் உள்ள எல்ஐசி அலுவலகம் முன் மறியலில் ஈடுபடுவதற்காக பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த கூட்டமைப்பினர் பாரதிதாசன் சாலையில் உள்ள மாநகராட்சி மைய அலுவலகம் முன் இன்று (நவ.26) திரண்டனர்.
அங்கிருந்து கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பியவாறு தொழிற்சங்கத்தினர் ஒத்தக்கடை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர்.
போலீஸார் தொழிற்சங்கத்தினரை வழியிலேயே தடுத்து நிறுத்தியதால், சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட தொமுச, சிஐடியு, ஏஜடியுசி, ஏஐஒய்எப், ஐஎன்டியுசி, எஸ்டியு, எச்எம்எஸ், எம்எல்எப், எல்எல்எப் மற்றும் மக்கள் அதிகாரம் உட்படப் பல்வேறு தொழிற்சங்கங்கள், அமைப்புகளைச் சேர்ந்த பெண்கள் 80 பேர் உட்பட 650 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இந்தப் போராட்டத்தில், "100 நாள் வேலை உறுதித் திட்டத்தை பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். ஆட்டோ தொழிலாளர்கள் அறியாத வகையில் ஆன்லைன் மூலம் அபராதம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும். கட்டுமானத் தொழிலாளர் நல வாரிய ஆன்லைன் பதிவை எளிமையாக்க வேண்டும்.
நல வாரிய அலுவலகங்களில் நேரடிப் பதிவு புதுப்பித்தல், கேட்புமனு பெறுவதை அமல்படுத்த வேண்டும். கட்டுமானத் தொழிலாளர்களிடம் பங்களிப்புத் தொகை வசூலிக்காமல் மாதம்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும். பெண் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 50 வயதிலேயே ஓய்வூதியம் வழங்க வேண்டும்" என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.