தமிழகத்தில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் சராசரியாகப் பெய்ய வேண்டிய மழை அளவைவிட இந்தாண்டு குறைவாகவே மழை பெய்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையமானது தினந்தோறும் பெய்கிற மழையளவு விவரத்தை தனது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றி வருகிறது. கூடவே, வாரம், மாதம், ஆண்டு என்று குறிப்பிட்ட காலகட்டத்தில் மாவட்டந்தோறும் பெய்ய வேண்டிய சராசரி மழை, பெய்த மழை போன்ற விவரங்களையும் வெளியிடுகிறது.
இதன்படி, அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நவம்பர் 25 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தில் பெய்ய வேண்டிய சராசரி மழையளவு 337.3 மில்லி மீட்டர். ஆனால், இந்தாண்டு 1.10.2020 முதல் 25.10.2020 வரையில் தமிழகத்தில் மொத்தம் 249.4 மி.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது. இது வழக்கத்தைவிட 26 சதவிகிதம் குறைவாகும்.
செங்கல்பட்டு, விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இந்தாண்டு வழக்கத்தைவிடக் குறைவாகவே மழை பதிவாகியிருக்கிறது. குறிப்பாக திருச்சி, அரியலூர், வேலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கடந்த ஆண்டைவிட பாதிக்கும் குறைவாகவே மழை பதிவாகியிருப்பதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.