அனுபவம் தந்த பாடத்தாலும், முன்னெச்சரிக்கை பணிகளாலும் இம்முறை நிவர் புயலின் பாதிப்பை புதுச்சேரி அரசு கட்டுப்படுத்தியுள்ளது. புயல் கரையைக் கடந்ததால் புயல் எச்சரிக்கைக் கூண்டு இறக்கப்பட்டது.
வங்கக் கடலில் ஏற்படும் புயல்கள் ஆரம்பக்கட்டத்தில் புதுவையை தாக்கும் என தகவல்கள் வெளியாகும். ஆனால், பெரும்பாலும் புயல்கள் நகர்ந்து ஆந்திரம், ஒடிசாவுக்கு சென்றுவிடும். தானே, நிஷா ஆகிய புயல்கள் புதுவையை தாக்கின. இதில், தானே புயலில் கடுமையான சேதம் நிகழ்ந்தது. இந்த சேதத்தால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.
அதிலிருந்து கிடைத்த அனுபவ பாடத்தால் நிவர் புயலை புதுச்சேரி அரசு முழுமையாக சமாளித்தது. நிவர் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டவுடன் முன்னெச்சரிக்கையாக அரசுத் தரப்பில் செயல்படத் தொடங்கினர்.
குறிப்பாகத் திட்டமிட்டு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மின்சாரம் துண்டிப்பு, மக்களை உஷார்படுத்தியது, மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு, கடைகளை மூட உத்தரவிட்டது, போலீஸ் ரோந்து பணி, விளம்பர பலகைகளை அகற்றியது. மரக்கிளைகள் செதுக்கியது போன்றவற்றால் பெரும் சேதத்தைத் தவிர்த்துள்ளனர்.
அதேநேரத்தில், இயற்கையின் சீற்றத்தால் தவிர்க்க முடியாத சேதமும் ஏற்பட்டுள்ளது. தானே புயலை ஒப்பிடுகையில் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
புயல் கரையை கடக்கும்போது 120 முதல் 145 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால், அந்த அளவுக்குக் காற்றின் வேகம் இல்லை. புயல் கரையை கடக்கத் தொடங்கியபோது இருந்த காற்றின் வேகம் படிப்படியாக குறைந்தது. இதுவும் சேதம் குறைவதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.
அரசு தரப்பில் விசாரித்தபோது, "கிராமப்பகுதியான மடுகரையில் வீடு சரிந்து விழுந்து வள்ளி, அவரது மகள் மகாலட்சுமி காயம் அடைந்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். சாலையில் விழுந்து மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடைபெறுகின்றன" என்றனர்.
புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கம்
நிவர் புயல் கரையைக் கடந்ததால் புதுச்சேரி துறைமுகத்தில் ஏற்றப்பட்டிருந்த புயல் எச்சரிக்கைக் கூண்டு கீழே இறக்கப்பட்டது. .