தமிழகம்

இலங்கை போர்க்குற்ற விவகாரம்: ஐ.நா. விசாரணைக் குழுவில் தமிழ் சமூக நீதிபதிகளை நியமிக்க வேண்டும் - இந்திய கம்யூ. தேசிய செயலாளர் டி.ராஜா வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது நிகழ்ந்த போர்க் குற்றங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தின்படி அமைக்கப்பட உள்ள விசாரணைக் குழுவில் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த நீதிபதிகளும் நியமிக்கப்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

கோவையில் செய்தியாளர் களிடம் அவர் நேற்று கூறியதாவது:

இலங்கையில் நடைபெற்ற போரின்போது நிகழ்ந்த மனித உரிமை மீறல் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. போர்க்குற்றம் குறித்து சர்வதேச மற்றும் நம்பகமான விசாரணை தேவை என்பதை பல நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன.

இதன்படி, இலங்கை அரசே சுதந்திரமான நீதி அமைப்பை ஏற்படுத்தி அதில் காமன்வெல்த் நாடுகளின் பிரதிநிதிகள், சர்வதேச நீதிபதிகள், புலன் விசாரணைக் குழுக்களை உள்ளடக்கி விசாரணை நடத்த வேண்டும் என்பதை குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு இலங்கை அரசு விசாரணைக் குழுவை அமைக்கும்போது, சுதந்திரமாக நீதி விசாரணை நடைபெற வழிவகுக்க வேண்டும். அதன்படி, ராஜபட்ச ஆட்சியின்போது தமிழர்களின் நிலை, போர்கால நிலைமை, போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகமான விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.

விசாரணைக் குழுவில் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த நீதிபதிகள் இருக்க வேண்டும். போர்க்குற்றம் தொடர்பான விசாரணையை 2 ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும். இலங்கைத் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும். குறிப்பாக, வெள்ளை நிற வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு, இதுவரையிலும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ள ஆயிரக்கணக்கிலான தமிழர்களின் நிலை குறித்த விவரங்களை வெளியிட வேண்டும்.

மோடி அரசால் பலனில்லை

இலங்கைப் பிரச்சினையில் தமிழ் மக்களுக்கு நிகழ்ந்த கொடுமை குறித்து இந்திய அரசு தானாக முன்வந்து இதுவரையிலும் பேசவில்லை. அந்த பிரச்சினையில் சிறிய முயற்சியைகூட எடுக்கவில்லை. இந்த தீர்மானத்துக்கு வெறும் ஆதரவு அளிப்பவர் என்ற அடிப்படையில் மட்டுமே இருந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மதிக்காமல் ஓரவஞ்சனை செய்து வருகிறது மத்திய அரசு. இதில் மட்டும் இல்லாமல் அனைத்து வகையிலும் பொய்யான பிரச்சாரத்தை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

போராட்டம் அறிவிப்பு

மத்திய, மாநில அரசின் தவறான கொள்கையால் விலைவாசி அதிகரித்துள்ளது. கிராமம், நகரம் என்ற பாகுபாடு இல்லாமல் பெரும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் மட்டும் 17 மாவட்டங்கள் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன.

ஆனால், மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதைக் கண்டித்து வரும் 5-ம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT