திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்றுவரும் கார்த்திகை தீபத் திருவிழாவின் 6-ம் நாளான நேற்று கோயில் பிரகாரத்தில் நடைபெற்ற நால்வர் வீதியுலா. (அடுத்த படம்) தீபத் திருவிழாவுக்காக தயாராகியுள்ள தீப கொப்பரை. 
தமிழகம்

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி தி.மலை அண்ணாமலையார் கோயிலில் நால்வர் வீதியுலா

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்றுவரும் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, 63 நாயன்மார்கள் உற்சவர் விழாவுக்குப் பதிலாக நால்வர் உற்சவம், வீதியுலா நடைபெற்றது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா வரும் 29-ம் தேதி நடைபெற உள்ளது. கரோனா ஊரடங்கால் பக்தர்கள் பங்கேற்பு இல்லாமல் நிகழாண்டுக்கான விழாவை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 10 நாட்கள் நடைபெறும் தீபத் திருவிழாவில் தினமும் காலை மற்றும் இரவில் பஞ்சமூர்த்திகள் உற்சவம் மாட வீதிகளில் நடைபெறுவதற்குப் பதிலாக கோயிலின் 5-ம் பிரகாரத்தில் நடைபெற்று வருகிறது.

விழாவின் 6-ம் நாளான நேற்று காலை விநாயகர், சந்திரசேகரர் உற்சவமும் இரவில் பஞ்சமூர்த்திகள் உற்சவமும் நடைபெற்றது. வழக்கமாக 6-ம் நாளில் நடைபெற வேண்டிய 63 நாயன்மார்கள் உற்சவம் ரத்து செய்யப்பட்டு, நேற்று உற்சவர்களுக்கு சிறப்பு பூஜைகள் மட்டும் செய்யப்பட்டன. தொடர்ந்து அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் என நால்வர் உற்சவமும், அண்ணாமலையார், விநாயகர் உற்சவமும் 5-ம் பிரகாரத்தில் வீதியுலாவும் நடைபெற்றன.

தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான 7-ம் நாளான இன்று (நவ.26) மாட வீதிகளில் நடைபெற வேண்டிய தேர்த் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக மூங்கிலால் செய்யப்பட்ட தேர்களில் விநாயகர், பாலசுப்பிரமணியர், உண்ணாமுலை சமேத அண்ணாமலையார், பராசக்தி, சண்டிகேஸ்வரர் சுவாமிகள் 5-ம் பிரகாரத்தில் சுற்றிவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தீபத் திருவிழா அன்று 2,668 அடி உயர அண்ணாமலை மீது தீபம் ஏற்றுவதற்கான கொப்பரை புதுப்பிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த தீப கொப்பரை கோயில் நிர்வாகத்தினரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. கோயிலில் தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, வரும் 28-ம் தேதி காலை மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்படும்.

SCROLL FOR NEXT