தமிழகம்

தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகளின் கரையோரங்களில் வசித்த மக்களை வலுக்கட்டாயமாக அகற்றிய போலீஸார்

செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் மழை பெய்து வருவதால் நீர் நிலைகளின் கரை ஓரங்களில் வசித்தவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக அகற்றினர். அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர்.

தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. மேலும், மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் உபரி நீர் திறந்து விடப்படுகிறது.

ஏரி, குளங்களில் வழக்கமான நீரை விடவும் அதிகமான நீர் உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் நிலைகளின் கரைகளில் வசிப்பவர்களையும், நீர் நிலைகளின் அருகே வசிப்பவர்களையும் வெளியேற்றும் பணியில் போலீஸார் நேற்று ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் அந்தந்த எல்லைக்கு உட்பட்ட போலீஸார் நீர் நிலை அருகே வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு கொடுத்து, அவர்களை வேறு இடங்களுக்கு செல்லுமாறு கூறினர். போலீஸாரின் எச்சரிக்கையையும் மீறி தொடர்ந்து அங்கேயே இருப்பவர்களை வலுக்கட்டாயமாக அகற்றும் பணியில் நேற்று போலீஸார் ஈடுபட்டனர்.

முதல் கட்டமாக நீர் நிலைகளுக்கு உள்ளேயே வசிக்கும் நபர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். 2015-ம் ஆண்டில் சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, நீர் நிலைகளை ஆக்கிரமித்து குடியிருந்தவர்களே அதிகமான அளவு உயிரிழந்தனர். எனவே உயிரிழப்பை தடுக்கும் விதமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.

நேற்று செம்பரம்பாக்கம் அணை திறக்கப்பட்டது. அதற்கு முன்னதாக காலையில் சென்னையில் அடையாறு மற்றும் பக்கிங்காம் கால்வாய் பகுதிகளில் நேற்று 2-வது முறையாக போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது போரூர் பகுதியில் கரையில் வசித்த சிலரை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அகற்றினர். மழைக்காலம் முடியும் வரை இங்கு யாரும் தங்கக்கூடாது என்று போலீஸார் எச்சரித்து அவர்களை அனுப்பினர்.

ஆற்றின் நீர்நிலைகளின் கரையோரம் சென்று பொதுமக்களை அப்புறப்படுத்த வேண்டியிருப்பதால், தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்களும் போலீஸாருடன் சென்று உதவி செய்தனர்.

கரைகளில் இருந்து அப்புறப் படுத்தப்படும் மக்கள் அருகே உள்ள மாநகராட்சி முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர்.

SCROLL FOR NEXT