தாம்பரம் சுற்று பகுதியில் கொட்டிதீர்த்த கனமழையினால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய நீரால்பல்வேறு சாலைகள் துண்டிக்கப்பட்டன.
கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக கனமழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. இதனால் நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தாம்பரம் சுற்று பகுதியில் பல்வேறு இடங்களில் மழைநீர்சாலைகளில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக மாடம்பாக்கம் பிரதான சாலை, வண்டலூர் - கேளம்பாக்கம் சாலை, வல்லக்கோட்டை - ஏறையூர் சாலை அகரம் தென் அன்னை சத்திய நகர் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் மழை நீர் ஆறாக ஓடியது இதனால் சாலைகள் துண்டிக்கப்பட்டன.
மேலும் பல்வேறு சாலைகளில் முழங்கால் அளவுக்கு மழைநீர்தேங்கியது. இதனால் சாலைகளில்சென்ற வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். சிலரது இருசக்கர வாகனங்கள் திடீர் பழுது காரணமாக ஓடாமல் நின்றது. அதனை பரிதவிப்புடன் தள்ளிச்செல்லும் வாகன ஓட்டிகளையும் அதிகமாகவே பார்க்க முடிந்தது.
தண்ணீரை வெளியேற்ற...
அதேபோல் தாழ்வான இடங்களில் வெள்ளம் போன்று தண்ணீர்தேங்கியது. குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. குறிப்பாக முடிச்சூர், தாம்பரம், வரதராஜபுரம், ராஜகீழ்பாக்கம், அகரம்தென், திருநீர்மலை, பம்மல், அனகபுத்தூர், கவுல்பஜார் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் வீடுகளைசுற்றி மழை நீர் தேங்கியது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளும் தங்கள் வசிப்பிடத்தை சுற்றி மழைநீர் சூழ்ந்ததால் அவதிக்கு ஆளானார்கள். பாதிக்கப்பட்ட பகுதியில் அதிகாரிகள் ஆய்வுமேற்கொண்டு தண்ணீர் வெளியேற நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்நிலையில் நிவர் புயல் எச்சரிக்கை காரணமாக, பொதுமக்கள் பாதுகாப்பு கருதி நிவர்புயல் கரையை கடந்து செல்லும்வரை செங்கல்பட்டு மாவட்ட எல்லைகளான ஜி.எஸ்.டி சாலை,கிழக்கு கடற்கரை சாலை மற்றும்ஓ.எம்.ஆர் சாலை வழியாக அனைத்து பொதுமக்களும்போக்குவரத்தை தவிர்க்குமாறு செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.