தூத்துக்குடி அருகேயுள்ள தருவை குளத்தை சேர்ந்த 8 மீனவர்கள் ஒரு விசைப்படகில் மீன்பிடித்துவிட்டு நேற்று அதிகாலை கரை திரும்பிக் கொண்டிருந்தனர். தூத்துக்குடியில் இருந்து 11 கடல் மைல் தொலைவில் வந்து கொண்டிருந்தபோது திடீரென படகு இன்ஜின் அறைக்குள் கடல்நீர் புகுந்து, இன்ஜின் பழுதாகி நின்றுவிட்டது. இதனால் படகை மேற்கொண்டு செலுத்த முடியாமல் மீனவர்கள் நடுக்கடலில் தத்தளித்தனர்.
இதுகுறித்து அவர்கள் துறை முகத்துக்கு தகவல் தெரிவித்தனர். துறைமுக அதிகாரிகள் இந்திய கடலோர காவல் படைக்கு அதிகாலை 2.25 மணிக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் தூத்துக்குடி கடலோர காவல் படையினர் விரைவு ரோந்து படகு மூலம் அந்த பகுதிக்கு அதிகாலை 3.30 மணிக்கு சென்றனர். படகை கடலோர காவல் படையினர் ஆய்வு செய்தபோது, படகில் உள்ள கடல்நீர் குழாய் ஒன்றில் உடைப்பு ஏற்பட்டு இன்ஜின் அறைக்குள் தண்ணீர் புகுந்தது தெரியவந்தது. இதையடுத்து இன்ஜின் அறையில் இருந்த தண்ணீரை மோட்டார் மூலம் உறிஞ்சி வெளியேற்றி, குழாய் உடைப்பை சரி செய்தனர். அதன் பிறகு படகு இன்ஜின் பழுது பார்க்கப்பட்டு, இயக்குவதற்கு தயாரானது. தொடர்ந்து காலை 9.20 மணிக்கு மீன்வளத்துறை ஏற்பாட்டில் அங்கு வந்த மற்றொரு படகு மூலம், இந்த படகு கரைக்கு இழுத்து வரப்பட்டது. பத்திரமாக கரைக்கு வந்து சேர்ந்த மீனவர்கள் கடலோர காவல் படையினருக்கு நன்றி தெரிவித்தனர்.
நாகர்கோவில்
நிவர் புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து மூவாற்று முகம்,வள்ளங்குழிவிளை, முஞ்சிறை, தேங்காய்பட்டணம், களியல் போன்ற பகுதிகளை கன்னியாகுமரி ஆட்சியர் மா.அரவிந்த் பார்வையிட்டு, பாதுகாப்பு முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தார்.
நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர்மேலாண்மை துறை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையையும், அதன் செயல்பாட்டினையும் ஆட்சியர் ஆய்வு செய்தார். திருவட்டாறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பேரிடர் மீட்பு மையத்தையும் பார்வையிட்டார்.
இந்நிலையில் கன்னியாகுமரி கடலில் நிவர் புயலால் சூறைக்காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால் மெரைன் போலீஸார், மற்றும் மீன்வளத்துறையினர் கடலோர பகுதிகளை கண்காணித்தனர். ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான மீனவ கிராமங்களில் நேற்று 3- வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகுகள் கரை திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், 200- க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் மீன்பிடிதுறைமுகங்களில் கரைதிரும்பின. லட்சத்தீவு மற்றும் மகாராஷ்டிரா பகுதிகளுக்கு மீன்பிடிக்க சென்ற 121 விசைப்படகுகளும் கரைதிரும்பியுள்ளன.