நிவர் புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை (நவம்பர் 26-ம் தேதி) அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதி தீவிரப் புயலாக மாறியுள்ள நிவர், வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்று (நவ.25) இரவு கரையைக் கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அப்பகுதிகளில் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரியில் நிவர் புயல் காரணமாக இன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. புயல் தாக்கத்தின் காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் நாளையும் பொது விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும். இதற்கு மாற்றுப் பணி நாளாக வரும் டிசம்பர் 19ஆம் தேதி பணிபுரிய வேண்டும். அத்தியாவசியப் பணிகள் மற்றும் பேரிடர் மேலாண்மை, கரோனா பணிகளில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது.
ஆளுநர் கிரண்பேடி உத்தரவின் பேரில் இதற்கான ஆணையைச் சார்புச் செயலர் ஹிரண் பிறப்பித்துள்ளார்.