சிதம்பரம் அருகே கீழகுண்டலபாடி கிராமத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் தயார் செய்யப்பட்ட உணவை சிதம்பரம் சார்ஆட்சியர் மதுபாலன், எம்எல்ஏ பாண்டியன் ஆகியோர் ஆய்வு செய்தனர். 
தமிழகம்

முகாம்களில் சிதம்பரம், பரங்கிப்பேட்டை பொதுமக்கள் தங்கவைப்பு: சார் ஆட்சியர் நடவடிக்கை

க.ரமேஷ்

கடலூர் மாவட்டம் சிதம்பரம், பரங்கிப்பேட்டை பகுதிகளில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பொதுமக்கள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நிவர் புயல் கரையைக் கடக்க இருப்பதால் கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் பல்வேறு புயல் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன் சிதம்பரம், பரங்கிப்பேட்டை பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசித்து வந்த பொதுமக்களைப் புயல் பாதுகாப்பு மையம், பல்நோக்கு மையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதுகாப்பாகத் தங்கவைக்க ஏற்பாடு செய்தார்.

கடற்கரைப் பகுதியான பரங்கிப்பேட்டை பகுதியில் பரங்கிப்பேட்டை, எம்ஜிஆர் திட்டு, குச்சிப்பாளையம், மடவாப்பள்ளம், குமரப்பேட்டை, சாமியார்பேட்டை, திருவள்ளுவர் இருளர் குடியிருப்பு, அகரம் புதுப்பேட்டை இருளர் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களும், சிதம்பரம் பகுதியில் உள்ள கீழகுண்டலபாடி, அக்கரை ஜெயங்கொண்டப்பட்டினம், திட்டுக்காட்டூ ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் அப்பகுதியில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டனர். சிதம்பரம் பாமான் ஆற்றங்கரைகளில் வசிக்கும் மக்கள், ரயிலடி அரசு பெண்கள் பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.

எம்ஜிஆர் திட்டு பல்நோக்கு மையத்தை சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன், எம்எல்ஏ பாண்டியன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

முகாம்களில் உள்ளவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டன. பொதுமக்கள் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ள மையங்களை சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன், சட்டப்பேரவை உறுப்பினர் பாண்டியன், ஊராட்சித் தலைவர் திருமாறன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களிடம் சரியான முறையில் போதுமான அளவுக்கு உணவு வழங்கப்படுகிறதா, மருந்து, மாத்திரைகள் கிடைக்கிறதா என்று கேட்டறிந்தனர். சிதம்பரம் வருவாய் உட்கோட்டத்துக்கு உட்பட்ட சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி வட்டங்களில் 74 பாதுகாப்பு மையங்களில் 948 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 162 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT