செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 7000 கன அடி நீர் வரும் ஆகையால் உரிய நடவடிக்கை எடுத்து நீரை வெளியேற்றுவது, மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அகற்றுவது குறித்து மத்திய ஜல்சக்தி அமைச்சகம் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு பெய்த பெருமழை மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியை ஒட்டி இருந்த பகுதிகளில் பெய்த 20 செ.மீ.க்கும் மேலான மழை, நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக திடீரென செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அதிக அளவிலான நீர் திறக்கப்பட்டதால் சென்னையில் பெருவெள்ளம் சூழ்ந்தது.
வீடுகளில் சூழ்ந்த பெருவெள்ளம், உடமைகள் இழப்பு, பலருக்கு தங்கள் வாழ்நாள் சேமிப்பெல்லாம் இழக்கும் நிலை, உயிரிழப்பு என சென்னையின் வரலாற்றில் மிகுந்த பேரிடராக அமைந்தது. அதன் துக்கச் சுவடுகளை சென்னை மக்கள் யாரும் மறக்கவில்லை. அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் மழை, புயல் என வரும்போது சென்னை மற்றும் புறநகர் மாவட்ட மக்கள் மிகுந்த கவலையுடனே பார்ப்பார்கள்.
இந்நிலையில் 5 ஆண்டுகள் கழித்து அதேபோன்று கனமழை, நிவர் புயல் காரணமாக சென்னைக்கு ஏற்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெய்யும் கனமழை மற்றும் புயல் கரையைக் கடக்காத நிலை பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியும் அதன் முழுக்கொள்ளளவை எட்டி வருகிறது.
24 அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி தற்போது 22 அடியைத் தொட்டுவிட்டது. விநாடிக்கு 4000 கன அடி நீர் வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை மத்திய ஜல்சக்தி அமைச்சகம் செம்பரம்பாக்கம் ஏரி குறித்த தகவலைக் கேட்டது.
இந்நிலையில் 22 அடியை எட்டியதால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 1000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. நேற்று சென்னை, புறநகரில் 16 செ.மீ மழை பெய்துள்ளது. நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி குறித்து நீர்வள அமைச்சகம் (ஜல்சக்தி) தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில், ''செம்பரம்பாக்கம் ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் 25-ம் தேதி அதிகாலை 6 மணியிலிருந்து 26 அதிகாலை 6 மணிவரை 15 முதல் 20 செ.மீ. மழை பெய்ய வாய்ப்புள்ளது. வினாடிக்கு 7000 கன அடி நீர் வர வாய்ப்புள்ளதால் உரிய ஏற்பாட்டைச் செய்ய வேண்டும். கரையோரத்தில், வெள்ளம் சூழும் பகுதியில் வாழும் பொதுமக்களைப் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்த வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளது.
இதுதவிர விமான நிலையத்தில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யும்படி விமான நிலைய அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடையாறு ஆற்றில் வெள்ளம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம் தாலுக்கா மக்களை உரிய எச்சரிக்கையுடன் பாதுகாப்பான இடங்களுக்கு அகற்றவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தின் பிரதி பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர், பேரிடர் மேலாண்மை நிர்வாக ஆணையர், கொசஸ்தலை ஆறு டிவிஷன் பொதுப்பணித்துறை நிர்வாகப் பொறியாளர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.