மனநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வீட்டைவிட்டு காணாமல் போன இளம்பெண் ஒருவரை மீட்டு பாதுகாப்பாக குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளது விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு.
ஒடிசா மாநிலம் பர்பந்தா பகுதியைச் சேர்ந்த கோபால்நாயக் என்பவரது மகள் பத்மினி நாயக் (31). மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வீட்டிலிருந்து காணாமல் போனார். இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள ஒரு மனநல காப்பகத்தில் வெளிமாநில பெண் ஒருவர் தங்கியிருந்து அங்கிருந்து காணாமல் போனதாக மல்லி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதையடுத்து, குறிப்பிட்ட பெண்ணைக் கண்டுபிடித்து போலீஸார் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள 2வது நீதித்துறை மன்றத்தில் நீதித்துறை நடுவர் பரம்வீர் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். விசாரணையில் அப்பெண் ஒடிசாவைச் சேர்ந்தவர் என்பதும் அவரைப் பற்றிய விவரங்களும் தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முத்துசாரதாவுக்கும் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து, மீட்கப்பட்ட பெண்ணின் முகவரி, பெற்றோரை கண்டறிந்து அவர்களைத் தொடர்புகொண்டு அவர்களிடம் மீட்கப்பட்ட பெண்ணை ஒப்படைக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவுக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முத்துசாரதா உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக கூடுதல் எஸ்.பி. மாரிராஜன், மாநில குற்ற ஆவண காப்பக கூடுதல் எஸ்.பி.க்கள் ஸ்ரீதேவி, லாவண்யா, இன்ஸ்பெக்டர் தாகிரா, மாவட்ட ஆள்கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.ஐ.ராஜேஸ்வரி மற்றும் மல்லி காவல்நிலைய போலீஸார் குழுவினர் மனநோயால் பாதிக்கப்பட்ட பெண் பற்றிய விவரங்களை சேகரித்தனர்.
அதையடுத்து, இப்பெண்ணின் பெற்றோர் ஸ்ரீவில்லிபுத்தூர் வரவழைக்கப்பட்டனர். பின்னர், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முத்துசாரதா முன்னிலையில் பெற்றோரிடம் பத்மினி நாயக் ஒப்படைக்கப்பட்டார்.