நிவர் புயலால் கிழக்குக் கடற்கரைச் சாலையில் வாகனங்கள் செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் காரணமாக கிழக்குக் கடற்கரைச் சாலையை ஒட்டியுள்ள மீனவ கிராமங்களில், கடல் அலை கடுமையான சீற்றத்துடன் வீசத் தொடங்கியுள்ளது. இதனால் கிழக்குக் கடற்கரைச் சாலையில் வாகனப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக வாகனங்கள் செல்லக்கூடாது எனப் புதுச்சேரியை ஒட்டிய விழுப்புரம் பகுதியில் சாலையில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்ட எல்லையான கீழ்புத்துப்பட்டு பகுதியிலேயே வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு அய்யனார் கோயில், ஒழிந்தயாப்பட்டு வழியாகத் திண்டிவனம் சாலைக்கு வாகனங்கள் மாற்றி விடப்படுகின்றன. அதேபோல் புதுச்சேரியில் இருந்து கோட்டக்குப்பம் வழியாக வரும் வாகனங்களும் ஈசிஆரில் அனுமதிக்கப்படவில்லை. இருசக்கர வாகனங்கள்கூட, கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாகச் செல்லக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிழக்குக் கடற்கரைச் சாலையை ஒட்டிக் கடலோரப் பகுதி உள்ளதால் கடல் சீற்றத்தின் காரணமாகப் பாதிப்பு உருவாகக்கூடும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் தெரிவித்தனர்.