புயலால் பாதிக்கப்படும் மக்களுக்கு அதிமுகவினர் உதவ வேண்டும் என, அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (நவ. 25) கூட்டாக வெளியிட்ட அறிக்கை:
"தமிழகம் முழுவதும் பெருமழை பெய்து வருகிறது. வலுவான புயல் தமிழகத்தைத் தாக்க இருக்கிறது. இந்த இயற்கை இடர்ப்பாடுகள் நிறைந்த சூழலில், தமிழ்நாட்டு மக்களின் தேவைகளை அறிந்து, அவர்களுக்கு உடனுக்குடன் உதவிட தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் இரவு, பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கிறது.
நிவாரணப் பணிகளிலும், மறுவாழ்வுப் பணிகளிலும் அரசுக்குத் துணை நின்று, மக்களின் துயர் துடைக்கும் தன்னார்வப் பணிகளை அதிமுகவினர் முழுமூச்சோடு மேற்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஜெயலலிதா காட்டிய வழியில் தமிழ்நாடு முழுவதும் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு உள்ளானவர்களை தேடிச் சென்று அவர்களின் தேவை அறிந்து பணியாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் நமக்கு இருக்கிறது. அந்தப் பணிகளை வழக்கம்போல மகிழ்ச்சியுடனும், மனநிறைவுடனும் செய்து முடிப்போம்.
அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட அதிமுக செயலாளர்கள், அதிமுக நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகள், அதிமுகவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் அதிமுக தொண்டர்கள் அனைவரும் உடனடியாகக் களப் பணியாற்றிட அன்புக் கட்டளையிடுகிறோம்.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு உணவுப் பொருட்களை உடனடியாக வழங்க என்னென்ன செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் விரைந்து செய்யுங்கள். எத்தனை வேளை உணவு என்றாலும் அவற்றை மக்கள் அனைவரும் தேவையான அளவுக்குப் பெறுவதை உறுதி செய்யுங்கள். வெள்ளத்தில் ஆடைகளை இழந்தோர், அடிப்படைத் தேவைகளை இழந்தோர் அனைவருக்கும் அதிமுகவின் அன்புக் கரங்கள் விரைந்து உதவட்டும்.
பெய்து வரும் பெருமழையால் தாழ்வான பகுதிகளிலும், கரையோரப் பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியும், சூழ்ந்தும் இருக்கும். அந்தத் தண்ணீரை உடனடியாக வெளியேற்ற மின்மோட்டார்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி ஏற்பாடுகளைச் செய்யுங்கள்.
புயல் கடந்து, மழை ஓய்ந்து நிலைமை சரியாகத் தொடங்கும் வரையில் செய்யப்பட வேண்டி மறுவாழ்வுப் பணிகளிலும் அக்கறை செலுத்துங்கள். நம் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பும் வரை அவர்களோடு இருங்கள். அவர்களுக்குத் தேவையானவற்றை கடமை உணர்வோடு திறம்படச் செய்யுங்கள்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுகவின் சார்பில் வழங்கப்படும் நிவாரண உதவிகள் மற்றும் நிவாரணப் பணிகளில் தாங்கள் ஈடுபட்டது குறித்த முழு விவரங்களை புகைப்படத்துடன் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்".
இவ்வாறு ஓபிஎஸ்- ஈபிஎஸ் தெரிவித்துள்ளனர்.