தமிழகம்

சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஸ்டாலின் ஆய்வு: நிவாரண உதவிகளை வழங்கினார்

செய்திப்பிரிவு

மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட வடசென்னை பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அங்குள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

தமிழத்தை நோக்கி வரும் நிவர் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து பெய்யும் கனமழையால் பொதுமக்கள் வெளியில் வர முடியாமல் அத்தியாவசியப் பொருட்கள் எதுவும் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

நேற்று புயல் நிலவரத்தைக் கண்டு திமுக சார்பில் தொண்டர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் வைத்திருந்தார்.

''வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘நிவர்’ புயலால் தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்களிலும், உள்பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். திமுக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகளும், துணை அமைப்புகளின் நிர்வாகிகளும் இந்தப் பேரிடர் நேரத்தில் மக்களுக்கு உற்ற துணையாக இருக்க வேண்டும்.

பாதுகாப்பான இடங்களில் மக்களைத் தங்க வைப்பதற்கும், அவர்களுக்குத் தேவையான உணவு - குடிநீர் வழங்குவதற்கும் திமுக நிர்வாகிகள் முழுமையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அவசர மருத்துவ உதவிகளுக்குத் தேவையான ஏற்பாடுகளையும் செய்திட வேண்டும்'' என ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் இன்று காலை வடசென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சூளை, பெரம்பூர், திருவிக நகர், கொளத்தூர் பகுதிகளுக்குச் சென்றார். அங்குள்ள பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர் அங்குள்ள பொதுமக்களுக்கு போர்வை, பிரட், உணவு ஆகியவற்றை வழங்கினார். திமுக நிர்வாகிகளிடம் நிவாரணப் பணிகள் குறித்துக் கேட்டறிந்தார்.

SCROLL FOR NEXT