பழைய அனுபவங்களை மனதிற்கொண்டு தமிழ்நாடு அரசு திட்டமிட்டு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, கி.வீரமணி இன்று (நவ. 25) வெளியிட்ட அறிக்கை:
"கரோனா கொடுந்தொற்று கொடுமை இன்னமும் அச்சுறுத்திக் கொண்டுதான் இருக்கிறது; அதன் பாதிப்பு அறவே நீங்கவில்லை. தடுப்பூசி எப்போது வரும் என்று உலகமே ஆவலுடன் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது.
கரோனா சூழலில் புயல் - மழை சோதனை!
கரோனா கொடுந்தொற்று கொடுமையால் வேலை இழந்தவர்கள், பொருளாதாரத்தில் முடங்கிப் போனவர்கள், எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் சீர் செய்ய முடியாதோ என்று நம்பிக்கை இழந்த மனநிலையில் பெரும் மாற்றமில்லாத ஒரு சூழ்நிலை இங்கே நம் மக்களை வாட்டிடும் நிலையில், இன்றும், நாளையும் நிவர் என்ற புதுப்புயல் வங்காள விரிகுடாவில் மையங்கொண்டு காரைக்கால் - புதுச்சேரி - கடலூர் இடையே கரையைக் கடக்கக் கூடும்.
காற்று 150 கி.மீ. வேகத்தையும் தாண்டி வீசக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியதை வைத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசும், அதிகாரிகளும், தமிழக மக்களும் ஈடுபட்டுள்ளார்கள்!
பழைய அனுபவங்கள் - 2015 நிலை ஏற்பட்டுவிடக் கூடாது - கவனம்!
சோதனைக்கு மேல் வேதனையான நிலைமை, இயற்கையின் சீற்றத்தை எதிர்கொண்டே தீருவதைத் தவிர வேறு வழிதான் என்ன?
தேசிய பேரிடர் தடுப்பு பயிற்சி பெற்ற வீரர்கள் ஆயத்த நிலையில் ஆங்காங்கே உள்ளனர் என்பது நம்பிக்கையூட்டக்கூடிய செய்தி!
சென்னை மாநகரம் சாதாரண மழைக்கே தாங்காது! கடும் மழை தொடர்ந்து சில நாட்களாக பெய்வதால், வெள்ளக்காடாக அண்ணா சாலை, பெரியார் நெடுஞ்சாலை மற்றும் முக்கிய சாலைகள் ஆறுகளாகவும், குளங்களாகவும் காட்சியளிக்கின்றன!
செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 24 கன அடி என்றால், 22 கன அடிக்குமேல் நிரம்பியுள்ள நிலையில், இன்று மதியம் அதைத் திறந்துவிட்டிருக்கக்கூடிய நிலையில், பொதுப்பணித் துறை அதிகாரிகள் மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு மக்களைப் பாதுகாக்க வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.
அரசு, மீண்டும் 2015 நிகழ்வுபோல் ஏற்படாமல், தகுந்த முன்னெச்சரிக்கை, தடுப்பு, நிவாரண ஏற்பாடுகள் தேவை! கரையோர குடியிருப்பு வாசிகளை அகற்றி, பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க வேண்டும்; மற்றபடி பழைய அனுபவப் பாடங்களை மறக்காமல் சரியான ஏற்பாடுகளில் ஈடுபட வேண்டும்!
அரசு மட்டுமல்ல, தன்னார்வ அமைப்புகளுக்கும் கடமை உண்டு
தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள், அதுபோல, கடலோரப் பகுதிகளில் வாழும் மக்களை, குறிப்பாக மீனவ சமுதாய மக்களைப் பாதுகாக்கும் வகையில், ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களுக்குப் போதிய உணவு மற்றும் மருத்துவ வசதிகளை அமைந்துள்ள முகாம்களில் தடையின்றி தர போர்க்கால அடிப்படையில் அரசு செயல்பட்டாக வேண்டும்.
கடலோர மாவட்டங்கள், சுமார் 15 மாவட்டங்கள் அதிக கடும் மழையின் தாக்கத்தினாலும், கரையைக் கடக்கும் புயலினாலும் பாதிக்கப்படும் மக்களுக்குத் தேவைப்படும் அனைத்து உதவிகளைச் செய்ய அரசாங்க முயற்சிகள் பெரும் பகுதியாக இருந்தபோதிலும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், அமைப்புகளும், இயக்கங்களும் அவரவர்கள் தங்கள் பங்குக்கு மக்களைக் காப்பாற்றும் தொண்டறப் பணியில் தொய்வின்றி வரும் வாரம் முழுவதும் ஈடுபட வேண்டுகிறோம்.
திராவிடர் கழகத்தினர் தொண்டறப் பணியை மேற்கொள்வீர்!
நமது இயக்கத் தோழர்களும், புரவலர்களும் தங்களது எளிய பங்கை, பணிகளை செய்திட நன்கு திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். நமது இளைஞரணி, மாணவர் கழகத்தினர், விவசாய அணி, மகளிரணியினர் எல்லோரும் இப்பணியில் பங்கு பெறலாம்.
கடந்த 2015 ஆம் ஆண்டு பெருவெள்ளத்தின்போது சென்னையில் பெரியார் திடலில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் மேற்கொண்டதை முன்மாதிரியாகக் கொள்ளவும் திராவிடர் கழகத்தினர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்".
இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.