படம் எல்.சீனிவாசன் 
தமிழகம்

சென்னை, புறநகரில் பலத்த மழை; வெள்ளம் சூழ்ந்த பகுதிகள்: பொதுமக்கள் அவதி

செய்திப்பிரிவு

சென்னை மற்றும் புறநகரில் நேற்றிரவு முதல் பெய்த பலத்த மழையால் பெரும்பாலான பகுதிகள் வெள்ள நீர் சூழ்ந்து பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். புயல் கரையைக் கடக்காத நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியும் திறக்கப்படும் நிலையில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தன.

நிவர் புயல் தீவிரப் புயலாக மாறி சென்னைக்கு அருகே 330 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இதனால் நேற்று முன்தினம் இரவு முதல் மழை விட்டுவிட்டுப் பெய்கிறது. நேற்று சென்னையில் கடும் மழை பெய்தது. நேற்று 8 செ.மீ. அளவு மழை பெய்த நிலையில், நேற்றிரவு முதல் சென்னையிலும் புறநகரிலும் பலத்த மழை விட்டுவிட்டுப் பெய்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் சென்னை முழுவதும் அதிகபட்சமாக 16 செ.மீ. மழை பெய்தது. சென்னையின் சுற்றுப்புற மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது.புயல் கரையைக் கடக்கும் வரையிலும் அதற்கு மறுநாளும் மழை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மீனம்பாக்கத்தில் 15 செ.மீ. மழையும், தாம்பரத்தில் 11 செ.மீ. மழையும், தரமணியில் 10 செ.மீ. மழையும் பெய்தது. சென்னையைச் சுற்றியே அதிக கனமழை பெய்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புற நகரில் பெய்யும் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வருகிறது. முதல்வர் பழனிசாமி ஏற்கெனவே அறிவித்தபடி 22 அடி உயரும்போது நீர் திறக்கப்படும் எனத் தெரிவித்ததன் அடிப்படையில், மதியம் 12 மணி அளவில் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டது. முதற்கட்டமாக ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னையில் நீர் சூழும் இடங்களிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. குன்றத்தூர், திருநீர்மலை, ராமாபுரம், ஈக்காட்டுத்தாங்கல், எம்ஜிஆர் நகர், நெசப்பாக்கம், பர்மா நகர், ஜாபர்கான் பேட்டை, கோட்டூர்புரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பாக இருக்கும்படியும், மண்டலம் 10,11,12,13-ல் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு மையங்களுக்குச் செல்லவும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

சென்னையில் பெய்த கனமழை காரணமாக மாநகராட்சி கண்டறிந்து வைத்திருந்த 20 முக்கிய வெள்ளம் சூழ்கின்ற இடங்கள் மட்டுமல்லாமல் சென்னையில் பரவலாக வெள்ள நீர் சூழ்ந்தது. சாலையெங்கும் தேங்கிய வெள்ள நீரால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடுமையாக சிரமப்பட்டனர். தென்சென்னையின் பெரும்பாலான பகுதிகள், பாரிமுனை, வால்டாக்ஸ் சாலை, ஐஸ் ஹவுஸ், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் கடுமையாக நீர் சூழ்ந்துள்ளது.

சென்னை அடையாறு, திருவான்மியூர், அதையொட்டிய ஈசிஆர் சாலையில் கடுமையாக மழை பெய்து வருகிறது. மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT