காரைக்கால் மாவட்டத்திலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்று, இன்னும் ஊர் திரும்பாத காரைக்கால் மாவட்ட மீனவர்கள், பாதுகாப்பாக உள்ளதாகவும், அவர்கள் அனைவரும் மீன் வளத்துறையினருடன் தொடர்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் இன்று (நவ. 25) மாலை காரைக்கால் - புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என்றும், இதனால் மிக பலத்தக் காற்றுடன், கன மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும், ஏற்கெனவே கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், காரைக்கால் மாவட்டத்திலிருந்து, கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் பலர் இன்னும் ஊர் திரும்பவில்லை. சிலரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை என மீனவர்கள் தரப்பில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை வரை 10 படகுகளில் உள்ள மீனவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என மீன் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், காரைக்கால் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் ஆர்.கவியரசன் இன்று (நவ. 25) காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த மொத்தம் 192 மீன்பிடி விசைப் படகுகளில், கடந்த நவ.23 ஆம் தேதி காலை 11 மணி நிலவரப்படி 102 படகுகள் பாதுகாப்பாக காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்தன. 24-ம் தேதி காலை 10 மணி நிலவரப்படி 67 மீன்பிடி படகுகள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றடைந்தன. அன்று மாலை 7 மணி நிலவரப்படி 23 மீன்பிடி படகுகள் மட்டுமே கரை திரும்ப வேண்டியிருந்தது.
கோடியக்கரை கடல் பகுதியில், கடல் மிகவும் அமைதியாக இருந்த காரணத்தாலும், மீன்கள் அதிகமாக கிடைத்ததாலும், அந்தப் படகுகளிலிருந்த மீனவர்கள் அப்பகுதியில் மீன்பிடித்தொழிலில் பாதுகாப்பாக ஈடுபட்டிருந்தனர். அவர்களை, மீன்வளத்துறை அதிகாரிகள் தொலைபேசி மூலம் நேரடியாக தொடர்பு கொண்டு கேட்டபோது, இன்று (நவ.25) காலை 6 மணிக்குள் கோடியக்கரை கடல் பகுதிக்கு அருகாமையில் உள்ள மல்லிப்பட்டினம் அல்லது ஜெகதாப்பட்டினம் மீன்பிடி துறைமுகங்களுக்குப் பாதுகாப்பாக சென்றடைந்து விடுவதாகக் கூறினர்.
இன்று காலை நிலவரப்படி அந்தப் படகுகளில், 2 படகுகள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்தன. மல்லிப்பட்டினம் துறைமுகத்துக்கு ஒரு படகும், முத்துப்பேட்டைக்கு 4 படகுகளும் சென்றடைந்துள்ளன. மீதமுள்ள 16 மீன்பிடி படகுகள் காரைக்கால் துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. அவை இன்று மதியம் 2 மணிக்குள் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே காரைக்கால் பகுதியைச் சேர்ந்த அனைத்து மீன்பிடி விசைப் படகுகளும் மீன்வளத் துறையின் நேரடி தொடர்பில் உள்ளன"
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.