காங்கிரஸ் சார்பில் வரும் 28-ம்தேதி நடக்க இருந்த ஏர் கலப்பை பேரணி, புயல் காரணமாக டிச.2-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக காங்கிரஸ் சார்பில் நவ. 28-ம் தேதி நடத்ததிட்டமிட்டிருந்த ஏர் கலப்பை பேரணி புயல் சீற்றம் காரணமாகடிச.2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் விவாதமே நடத்தாமல் மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை எதிர்த்து ஐஎன்டியூசி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து நவ.26-ம் தேதி ஒருநாள் தேசிய அளவில் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி, காப்பீடு நிறுவனங்களின் சங்கங்கள், வங்கி, ரயில்வே மற்றும் மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் இயங்கும் சங்கங்கள் இணைந்து நவ.25-ம் தேதி நள்ளிரவு முதல் நவ.26-ம் தேதி நள்ளிரவு வரை முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்கள் நேரு, இந்திரா காந்தியால் கொண்டு வரப்பட்டவை. அனைத்து வகை சுரண்டல்களில்இருந்தும் தொழிலாளர்களை காக்க அப்போது 44 சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. தற்போது எந்த விவாதமும் இன்றி, தொழிலாளர்களுக்கு எதிரான 4 சட்டங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
எனவே, நவ.26-ம் தேதி நடக்கும் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினரும், ஐஎன்டியூசி தொழிற்சங்கத்தினரும் அதிக அளவில் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.