வேலோடு வெற்றியையும் கைப்பற்றவே தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்தப்படுகிறது என்று பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் பாஜக மாவட்டத் தலைவர் கே.சிவசாமி தலைமையில் நேற்று நடைபெற்ற வேல் யாத்திரை நிகழ்ச்சியில் கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் பேசியதாவது: வேலோடு வெற்றியையும் கைப்பற்றவே தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்தப்படுகிறது. வேல் யாத்திரை அவசியமா எனக் கேட்கின்றனர். தமிழர்களின் கலாச்சாரம், பழக்க வழக்கங்களை கொச்சைப்படுத்துபவர்களுக்கு பாடம் புகட்ட வேல் யாத்திரை அத்தியாவசியமான ஒன்று. வேல் யாத்திரையால் கலவரம் தூண்டப்படும் என்றனர். ஆனால், பாஜகவினரைத்தான் திமுகவினர் தாக்கி வருகின்றனர். அவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். கந்த சஷ்டி கவசத்தை கேவலப்படுத்தியவர்களை தேசத்துரோக சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியே வேல் யாத்திரை தொடங்கப்பட்டது. அவர்களோடு திமுகவுக்கு தொடர்பு உள்ளது. அவர்களுக்கு சட்ட உதவிகளை திமுக செய்துவருகிறது.
2021-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏக்கள் அதிக எண்ணிக்கையில் இடம்பெறுவார்கள். பாஜக இடம்பெறும் தேசிய ஜனநாயக கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்றார்.
வேல் யாத்திரையைத் தொடங்திய பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.