வீட்டுவசதி துறை சார்பில் சென்னையில் ரூ.45.58 கோடியில் கட்டப்பட்டுள்ள அம்மா திருமண மண்டபங்கள், குடியிருப்புகள், நெடுஞ்சாலைத் துறை சார்பில் 9 மாவட்டங்களில் ரூ.27.16 கோடியில் கட்டப்பட்டுள்ள 11 பாலங்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசுநேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம் திருவள்ளூர் மாவட்டம்அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கத்தில் ரூ.12.22 கோடியில் கட்டப்பட்டுள்ள அம்மா திருமண மண்டபத்தை முதல்வர் பழனிசாமி காணொலி வாயிலாக திறந்துவைத்தார். சென்னை கொரட்டூர், வேளச்சேரியில் ரூ.22.61 கோடியில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபங்கள், சோழிங்கநல்லூரில் ரூ.10.75 கோடியில் கட்டப்பட்டுள்ள 32 மத்திய வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகளையும் முதல்வர் திறந்து வைத்தார்.
நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம் லக்கிநாயக்கன்பட்டி, திருவாரூர் மாவட்டம் மாப்பிள்ளைகுப்பம், கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூர் சின்னதடாகம் சாலை இந்திரா நகர்,நீலகிரி மாவட்டம் தும்மனாடா, நாமக்கல் மாவட்டம் சவுரிபாளையம், தஞ்சாவூர் மாவட்டம் சொக்கனவூர், கடலூர் மாவட்டம் மாத்தூரில் 2 பாலங்கள் என ரூ.27.16 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 11 பாலங்களையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் பி.தங்கமணி, வி.சரோஜா, பா.பெஞ்சமின், க.பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் க.சண்முகம், வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறைசெயலாளர் ராஜேஷ் லக்கானி, நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் ஆ.கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.