தமிழகம்

சென்னை ஐஐடி-யில் மாணவர் மர்ம மரணம்

செய்திப்பிரிவு

சென்னை ஐஐடி வளாகத்தில் இருக்கும் கல்லூரி விடுதி அறை ஒன்றில் மாணவர் ஒருவர் மர்ம மரணமடைந்தார். இது தற்கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இருப்பினும் விடுதி அறையிலிருந்து எந்த ஒரு தற்கொலைக் குறிப்பும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இது குறித்து போலீஸார் கூறும்போது, "சென்னை ஐஐடியில் பி.டெக் (எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்) இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார் ராகுல் ஜி.பிரசாத். இவர் கேரள மாநில கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர். கடந்த 2012-ல் அவர் இங்கு சேர்ந்துள்ளார். கங்கா விடுதியில் தங்கியிருந்தார்.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை ராகுல் அவரது அறையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை சக மாணவர்கள் பார்த்துள்ளனர். முந்தைய இரவு 9 மணியளவில்கூட ராகுல் அவரது நண்பர்களுடன் சகஜமாக பேசிக்கொண்டிருந்திருக்கிறார். அவர் திடீரென மர்மமான முறையில் இறந்துள்ளார். தற்கொலையா என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம்" என்றனர்.

கடந்த செப்டம்பர் மாதம், ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த எம்.டெக் மாணவர் ஒருவர் தாமிரபரணி விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். இரண்டு மாதங்களில் சென்னை ஐ.ஐ.டி.யில் இரண்டு மாணவர்கள் இறந்த சம்பவம் நடந்துள்ளது.

SCROLL FOR NEXT