கோப்புப்படம் 
தமிழகம்

சேலத்தில் டிசம்பர் 1 முதல் சாலை விதியை மீறினால் உடனடி அபராதம்

செய்திப்பிரிவு

சாலை விதிகளை மீறுவோரை கண்டறிய சேலம் 5 ரோட்டில் வாகனங்களின் பதிவெண்ணை துல்லியமாக அடையாளம் காணும் வகையில் நவீன ஏஎன்பிஆர் கேமரா டிசம்பர் 1-ம் தேதி முதல் பொருத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சாலை பாதுகாப்பு விதிகளை அமல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

சேலம் 5 ரோடு சாலை சந்திப்பில் ரூ.20 லட்சம் மதிப்பில் ஏஎன்பிஆர் கேமரா பொருத்தப்பட்டு, சோதனை முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சாலை சந்திப்பில், தரைத்தள சாலை, முதல் தளச்சாலை, 2-வது தளச் சாலை என 3 அடுக்குகளிலும் உள்ள 12 சாலைகளை கண்காணிக்கும் வகையில் 12 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் அனைத்தும், டெல்லியில் உள்ள தேசிய தகவல் மையத்தில் உள்ள கம்ப்யூட்டர் சர்வருடன் இணைக்கப்பட்டுள்ளன.

சாலையில் வரும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அல்லது சீட் பெல்ட் அணிந்துள்ளனரா? இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணிக்கின்றனரா? சாலையில் உள்ள எல்லைக்கோட்டை தாண்டாமல் நிற்கிறாரா? உள்ளிட்ட சாலை போக்குவரத்து விதிகளை மீறாமல் பயணம் செய்வது கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.

மேலும், சாலை விதிகளை மீறும் வாகனங்களின் பதிவெண்ணை துல்லியமாக போட்டோவாக பதிவு செய்து, காவல்துறை கண்காணிப்பு அறை, டெல்லி தேசிய தகவல் மையம் ஆகியவற்றில் தானியங்கி முறையில் பதிவாகிவிடும்.

அத்துடன் வாகன பதி வெண்ணைக் கொண்டு, அவரின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு, விதிமீறலுக்கான அபராதத் தொகைக்கான சலான் வந்து சேர்ந்துவிடும்.

அபராதத் தொகை தொடர்பான விவரம், வட்டார போக்குவரத்து அலுவலக கம்ப்யூட்டரிலும் பதிவாகிவிடும். விதிமீறலில் ஈடுபட்டவர்கள், அபராதத் தொகையை செலுத்தாமல் இருந்தால், அது கூடுதலாகிக் கொண்டே வரும்.

மேலும், விதிமீறும் வாகனத்தை விற்பனை செய்யும்போது, அபராதத் தொகை முழுவதும் செலுத்திய பின்னரே, வாகன விற்பனை பதிவு மேற்கொள்ள முடியும். இதுபோன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கும்.

டிசம்பர் 1-ம் தேதி முதல் ஏஎன்பிஆர் கேமரா நடைமுறைக்கு வருவதால், சேலத்தில் வாகனங்களை இயக்குபவர்கள், இனி கட்டாயம் போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.

SCROLL FOR NEXT