மின் நிறுத்தம் செய்யப்படும் என்ற தகவலால் கடலூர் மாவட்ட மக்கள் கவலையில் ஆழ்ந்திருத்த நிலையில், காற்றின் வேகத்தைப் பொறுத்தே மின் நிறுத்தம் செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் கடலூர் மாவட்ட மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள நிவர் புயல் நாளை (நவ.25) புதுச்சேரி அருகே கரையைக் கடக்குமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும், கடலூர் மாவட்டத்தில் முன்னதாகவே மின் நிறுத்தம் செய்யப்படும் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரப்பப்பட்டு வந்ததால், மக்கள் கவலையில் ஆழ்ந்தனர்.
இதனிடையே, மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் செ.சத்தியநாராயணன் கூறுகையில், "புயல் கரையைக் கடக்கும்போது மட்டுமே மின்சாரம் நிறுத்தப்படும். அந்தந்தப் பகுதிகளில் வீசும் காற்றின் வேகத்தினைப் பொறுத்து முடிவெடுக்க துணைமின் நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக எக்காரணம் கொண்டும் மின்சாரம் நிறுத்தப்படாது.
புயல் கரையைக் கடப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் அறிவிக்கும் நேரத்தில் மட்டுமே மின்சாரம் நிறுத்தப்படும். மழை பெய்தாலும் மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். புயல் கரையைக் கடந்த பின்னர் சேதங்கள் ஏற்படாமல் இருந்திருந்தால் அதனைச் சரி செய்து விரைவாக மின்சாரம் வழங்கப்படும். மின்சாரம் தடை தொடர்பாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட எண்களில் தகவல் தெரிவிக்கலாம்" என்று தெரிவித்தார்.