தமிழகம்

நிவர் புயலால் திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி, எஸ்.புதூர் பாதிக்க வாய்ப்பு: சிவகங்கை மாவட்டத்தில் 100 புயல் நிவாரண மையங்கள்- ஆட்சியர் தகவல்

இ.ஜெகநாதன்

‘‘சிவகங்கை மாவட்டத்தில் நிவர் புயலால் திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி, எஸ்.புதூர் ஆகிய பகுதிகள் பாதிக்க வாய்ப்புள்ளது. மேலும் புயலால் பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பாக தங்குவதற்கு 100 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன,’’ என மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்தது.

பிறகு ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. இதில் 60 கண்மாய்கள் முழுமையாக நிரம்பியுள்ளன. ஏராளமான கண்மாய்கள் 50 சதவீதம் நிரம்பியுள்ளன. அக்கண்மாய்களில் உடைப்பு ஏற்படாமல் கண்காணிக்க பொதுப்பணி, ஊரகவளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் கரை உடைப்பை சரிசெய்ய மணல் மூடைகள் தயார்நிலையில் உள்ளன. ஏற்கெனவே சேதமடைந்த அரசுக் கட்டிடங்கள், சாய்ந்த மரங்களை, மின்கம்பங்களை அகற்றப்பட்டு வருகின்றன.

புயலால் பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பாக தங்க 100 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர ஆங்காங்கே பள்ளிகள், சமுதாயக் கூடங்களில் தங்க வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிராமங்களில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலமாகவும், நகரங்களில் அம்மா உணவங்கள் மூலமாகவும் உணவுப் பொருட்கள் சமைத்து பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும்.

தென்னை, நெல், மிளகாய், பப்பாளி, வாழை போன்றவை தான் அதிகளவில் பாதிக்க வாய்ப்புள்ளது. அப்பயிர்களை பாதுகாக்க வேளாண்மைத்துறை அலுவலர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் புயலால் திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி, எஸ்.புதூர் ஆகிய பகுதிகள் பாதிக்க அதிக வாய்ப்புள்ளது.

வெள்ள பாதிப்பில் சிக்கியோரை மீட்க பயிற்சி பெற்ற போலீஸார், தீயணைப்புத்துறையினர் 200 பேர் தயாராக உள்ளனர். மேலும் அதிகாரிகள் விடுமுறை எடுக்கவும், மொபைலை ஆப் செய்யாமல் இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. தகவல் தெரிவிக்க விரும்புவோர் 1077-ல் தொடர்பு கொள்ளலாம்.

மின்தடை ஏற்படாமல் தடுக்கவும் மின்வாரியம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை என்னுடன் எஸ்பி, மாவட்ட வருவாய் அலுவலரும் கண்காணித்து வருகின்றனர், என்று கூறினார்.

SCROLL FOR NEXT