மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நவம்பர் 28ஆம் தேதி நடத்தத் திட்டமிட்டிருந்த ஏர் கலப்பைப் பேரணி புயல் சீற்றத்தின் காரணமாக டிசம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (நவ. 24) வெளியிட்டுள்ள அறிக்கை:
"நாடாளுமன்றத்தில் விவாதமே நடத்தாமல், மத்திய அரசு இயற்றிய தொழிலாளர்களுக்கு எதிரான, விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை எதிர்த்து, நவம்பர் 26-ம் தேதி வியாழக்கிழமை ஐஎன்டியூசி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து ஒருநாள் தேசிய அளவிலான போராட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையொட்டி, காப்பீட்டு நிறுவனங்களின் சங்கங்கள், வங்கி, ரயில்வே மற்றும் மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் இயங்கும் சங்கங்கள் இணைந்து நவம்பர் 25-ம் தேதி நள்ளிரவு முதல் நவம்பர் 26ஆம் தேதி நள்ளிரவு வரை முழு அடைப்புப் போராட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்கள் நேரு மற்றும் இந்திரா காந்தியால் கொண்டு வரப்பட்டவை. அனைத்து வகை சுரண்டல்களிலிருந்தும் தொழிலாளர்களைக் காக்க அப்போது 44 சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
தற்போது எந்த விவாதமும் இன்றி, தொழிலாளர்களுக்கு எதிரான 4 சட்டங்களாகக் குறைக்கப்பட்டு, ஜனநாயக நடவடிக்கையை மீறி 'வணிகத்தை எளிதாகச் செய்வது' என்ற அடிப்படையில் மோடி அரசு நிறைவேற்றியுள்ளது.
நம் நாட்டின் சொத்துகளை கார்ப்பரேட் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளை அடித்துச் செல்வதற்கு அமைதியாக வழியமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நடவடிக்கை இந்திய மக்களின், குறிப்பாகத் தொழிலாளர்களின் விருப்பத்துக்கும் நலனுக்கும் எதிரானதாகும்.
எனவே, தேசிய வேலை நிறுத்தத்தையொட்டி, நவம்பர் 26ஆம் தேதி நடைபெறும் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினரும், ஐஎன்டியூசி தொழிற்சங்கத்தினரும் பெருந்திரளாக இந்தப் போராட்டத்தில் பங்கேற்று, மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிற வகையில் அணி திரண்டு வருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நவம்பர் 28ஆம் தேதி நடத்தத் திட்டமிட்டிருந்த ஏர் கலப்பைப் பேரணி புயல் சீற்றத்தின் காரணமாக டிசம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்".
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.