காரைக்கால் மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளை மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா இன்று (நவ.24) நேரில் பார்வையிட்டார்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் நாளை (நவ.25) காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அவசர உதவிப் பணிகளுக்காக 16 குழுக்கள் அமைக்கப்பட்டு களப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 74 புயல் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 20 பேர் கொண்ட பேரிடர் மீட்புக் குழுவினர் அரக்கோணத்திலிருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, மாவட்டத்தில் உள்ள 11 மீனவக் கிராமங்களையும் இன்று நேரில் பார்வையிட்டு கள நிலவரம் குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''நிவர் புயல் வேகமாக நெருங்கி வரும் நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த சில மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. ஒரு சிலர் வந்துகொண்டுள்ளனர்.
மேலும் கடலில் உள்ள மீனவர்கள் அருகில் உள்ள கரைப்பகுதிக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் தங்கள் படகுகள் மற்றும் முக்கிய உடமைகளையும், வயதானவர்களையும் குழந்தைகளை பாதுகாப்பாகக் கவனித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவை ஏற்படின் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும் வகையில் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அத்தியாவசியமான பணிகள், செயல்பாடுகளைத் தவிர பிற பணிகளின் இயக்கத்துக்கு நாளை அனுமதியில்லை. மக்கள் அனைவரும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். காரைக்கால் மாவட்டத்தில் உயிரிழப்புகள் இல்லாமல், பெரிய அளவில் பொருட்கள் சேதமடையாது என்று நம்புகிறேன்'' என்று தெரிவித்தார்.
அப்போது மாவட்டத் துணை ஆட்சியர்கள் எம்.ஆதர்ஷ்(வருவாய்), எஸ்.பாஸ்கரன்(பேரிடர் மேலாண்மை) ஆகியோர் உடனிருந்தனர்.