நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்ட கடலோர கிராமங்களில் வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன் ஆய்வு மேற்கொண்டார்.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு நிவர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் மாமல்லபுரத்துக்கும் காரைக்காலுக்கும் இடையே கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் விழுப்புரம், கடலூர், நாகை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் பலத்த புயல் காற்று அடிக்கும், பலத்த மழையும் தொடர்ந்து பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து, கடலூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இந்த நிலையில், இன்று (நவ. 24) வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன், கடலூர் எஸ்.பி. ஸ்ரீஅபிநவ், சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன் ஆகியோர் கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
சிதம்பரம் அருகே உள்ள பெராம்பட்டு, திட்டுக்காட்டூர், மேலகுண்டலாபாடி, பரங்கிப்பேட்டை அருகே உள்ள சின்னூர், கடலூர் அருகே உள்ள தியாகவல்லி, நொச்சிக்காடு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், இக்கிராமங்களில் செயல்படுத்தப்பட்ட புயல், வெள்ள தடுப்பு நடவடிக்கைகளையும் பார்வையிட்டார்.
சிதம்பரம் டிஎஸ்பி லாமேக், அண்ணாமலைநகர் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் மற்றும் போலீஸார் உடனிருந்தனர்.