கடலூர் மாவட்ட காவல்நிலையங்களில் புயல் மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன.
'நிவர்' புயல் நாளை (நவ.25) பிற்பகல் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே 120 கிலோ மீட்டர் வேகத்தில் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, புயலை எதிர்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவாக மேற்கொண்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து, கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் புயல் மீட்பு உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று எஸ்.பி. ஸ்ரீ அபிநவ் உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து, கடலூர் மாவட்டத்தில் உள்ள 7 காவல் உட்கோட்டங்களில் உள்ள 46 காவல் நிலையங்களிலும் ஜேசிபி இயந்திரம், மரம் அறுக்கும் மின்சார வாள், கயறு, மிதவைகள் உள்ளிட்ட அனைத்துப் புயல் மீட்பு உபகரணங்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்தந்த பகுதி டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸார் ஆகியோர் தயார் நிலையில் உள்ளனர். தொடர்ந்து, ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.