வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிவர் புயலாக மாறி நாளை மாலை கரையைக் கடக்க உள்ளது. இந்நிலையில், முதல்வர் பழனிசாமியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பிரதமர் மோடி பேசினார். புயல் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து விசாரித்தபின், வேண்டிய உதவியை அளிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 450 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ள நிலையில் புயலாக மாறியது. இது தீவிரப் புயலாக வலுவடைந்து நாளை மாலை மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
புயல் காரணமாக ஏற்படும் பாதிப்புகளைக் கண்டறிந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய அமைச்சர்கள், துறைச் செயலர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இன்று மதியத்துக்கு மேல் 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மின்சாராம், பேரிடர் மேலாண்மை, உணவு உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் உள்ளன.
இந்நிலையில் பிரதமர் மோடி இன்று காலை முதல்வர் பழனிசாமியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விசாரித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“பிரதமர் நரேந்திர மோடி இன்று (24.11.2020) காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, தமிழ்நாடு மாநிலத்தில் நிவர் புயல் சம்பந்தமாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையினைக் கேட்டறிந்ததோடு, தேவைப்படும் உதவியும், ஒத்துழைப்பும், மத்திய அரசால் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்”.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.