தமிழகம்

‘நிவர்’ புயலை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது; பழைய கட்டிடங்களில் வசிப்பவர்கள் அரசு முகாம்களுக்கு வர வேண்டுகோள்: மக்கள் பாதுகாப்பாக இருக்க அமைச்சர் உதயகுமார் அறிவுரை

செய்திப்பிரிவு

‘நிவர்’ புயலை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதாகவும் பொதுமக்கள் கவனத்துடன் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் விரைவில் புயலாக உருமாறி தமிழகம்- புதுச்சேரி இடையில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ‘நிவர்’ என பெயரிடப்பட உள்ள புயல் தொடர்பாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நவ.23-ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது மேலும் வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது 740 கிமீ தொலைவில் உள்ள நிலையில், கரையை கடக்கும் போது 80 முதல் 100 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக மிக கனமழை, அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் அரக்கோணத்தில் இருந்து 6 தேசிய பேரிடர் மீட்புப்படை கடலூருக்கு அனுப்பப்பட்டுள்ளது. புயல், காற்று, கனமழையை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தொலைதொடர்பு கருவிகள் மூலம் கடலில் உள்ள மீனவர்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து ஏரிகள் மற்றும் நீர் நிலைகளை ஆய்வு செய்து, கரைகள் உடைப்பு இல்லாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ளவர்களை பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பழைய கட்டிடங்களில் வசிப்போர் உடனடியாக அரசு முகாம்களுக்கு வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது.

இடி, மின்னல் அதிகமாக தாக்கும் நேரங்களில் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம். நீர் நிலைகள், நீர் தேங்கும் இடங்கள், மழை நீர் செல்லும் பாதைகள், கடற்கரை பகுதிகளுக்கு குழந்தைகள், மக்கள் செல்லக் கூடாது.

பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களான வலுவான கயிறு, தீப்பெட்டி, மண்ணெண்ணெய். மெழுகுவர்த்தி, பேட்டரி டார்ச், உலர் பழ வகைகள், வறுத்த வேர்கடலை, பிரட் போன்றவற்றை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

கஜா புயல் போன்ற தாக்கத்தை இந்த புயல் ஏற்படுத்தாது எனதகவல் கிடைத்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது 100 கி.மீ.வேகத்துக்குள் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிக்க உகந்த நல்ல நீரை சேமித்து வைக்க வேண்டும்.

ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்குபுத்தகங்கள், கல்விச் சான்றிதழ்கள் மற்றும் சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட அடையாள ஆவணங்களை நீர் படாத வகையில் பாதுகாப்பாக சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். அவசர காலமற்றும் அன்றாடம் தேவைப்படும் மருந்துகளை தயாராக வைத்திருக்க வேண்டும். புயல் கரையை கடக்க குறைந்த பட்சம் 24 மணி நேரத்துக்கு முன் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். புயலை எதிர்கொள்ள அரசு தயார்நிலையில் உள்ளது. மக்கள் புயலை எதிர்கொள்ள தயாராகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT