மறைந்த தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி செட்டியாரின் செட்டிநாடு அறக்கட்டளைக்கு சொந்தமான குதிரைகளை பந்தயங்களில் பங்கேற்க விடாமல் தடுக்கும் நோக்குடன், விதிகளில் திருத்தம் கொண்டு வந்ததற்காக மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப்பில் குதிரை பந்தயங்கள் நடப்பது வாடிக்கை. இந்த பந்தயங்களில் மறைந்த எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியாரின் செட்டிநாடு அறக்கட்டளைக்கு சொந்தமான குதிரைகள் தொடர்ச்சியாக பந்தயங்களில் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து வருகின்றன.
மெட்ராஸ் ரேஸ் கிளப் பந்தயங்களில் பங்கேற்கும் குதிரைகளின் உரிமையாளர்கள் தங்களின் பெயர் மற்றும் குதிரைகளின் விவரம் குறித்து மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகத்திடம் பதிவு செய்ய வேண்டும்.
இந்நிலையில் இந்த பந்தயங்களில் எம்ஏஎம். ராமசாமி செட்டியாரின் செட்டிநாடு அறக்கட்டளைக்கு சொந்தமான குதிரைகளை பந்தயங்களில் பங்கேற்க அனுமதிக்க முடியாது என ரேஸ் கிளப் நிர்வாகம் கடந்தாண்டு மறுத்து உத்தரவிட்டது. அதை எதிர்த்து செட்டிநாடு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரான ஏ.சி.முத்தையா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி கடந்த ஜனவரி மாதம் பிறப்பித்த உத்தரவில், குதிரையின் உரிமையாளராக அறக்கட்டளை நிர்வாகம் இருக்க முடியாது என்ற ரேஸ் கிளப்பின் வாதம் ஏற்புடையதல்ல. எனவே செட்டிநாடு அறக்கட்டளைக்கு சொந்தமான குதிரைகளை, உரிய கட்டணங்கள் செலுத்தச் செய்து 2020-21ம் ஆண்டு நடக்கும் பந்தயங்களில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்.
இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும்போதே அறக்கட்டளைக்கு சொந்தமான 67 பழைய குதிரைகள் பந்தயங்களில் பங்கேற்க முடியாது என்றும், அறக்கட்டளை நிர்வாகம் புதிதாக வாங்கியுள்ள 4 குதிரைகளை பதிவு செய்ய முடியாது என்றும் கூறி மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் விதிகளில் திருத்தம் கொண்டுவந்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதை எதிர்த்து செட்டிநாடு அறக்கட்டளை சார்பில் ஏ.சி.முத்தையா மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பாக நடந்துவந்தது. அப்போது எம்.ஏ.எம். ராமசாமி அறக்கட்டளை நிர்வாகம் சார்பில் வழக்கறிஞர் எஸ்.சித்திரையானந்தமும், அறக்கட்டளை உறுப்பினர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.மாசிலாமாணியும், மெட்ராஸ் ரேஸ் கிளப் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் பி.எஸ்.ராமன், வி.ராகவாச்சாரி ஆகியோரும் ஆஜராகி வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘செட்டிநாடு அறக்கட்டளைக்கு சொந்தமான குதிரைகளை பதிவு செய்து பந்தயங்களில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் எனக்கூறி தனி நீதிபதி ஏற்கெனவே பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். ஆனால் அந்த உத்தரவுகளை மீறும் வகையில் இதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும்போது ரேஸ் கிளப் விதிகளில் திருத்தம் கொண்டு வந்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
எனவே இந்த செயலுக்காக மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் உடனடியாக ரூ. ஒரு லட்சத்தை சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கரோனா நோயாளிகளின் நலனுக்காக வழங்க வேண்டும். மேலும் மனுதாரரின் புதிய குதிரைகளை பதிவு செய்வதோடு ஏற்கெனவே உள்ள குதிரைகளையும் பந்தயங்களில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.