சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை கொடுத்ததாக ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியை போலீஸார் கைது செய்தனர்.
சென்னையில் தலீல் சந்த், புஷ்பா பாய், அவர்களது மகன் சீத்தல் குமார் ஆகியோர் கடந்த11-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக புனேவைச் சேர்ந்த கைலாஷ், ரவீந்திரநாத்கர், விஜய் உத்தம் கமல் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். சீத்தலின் மனைவி ஜெயமாலா, அவரது சகோதரர் விலாஸ்மற்றும் ராஜு ஷிண்டே ஆகியோரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரையும் யானைகவுனி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். முதலில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் தங்கள்காவலில் எடுத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் தலீல் சந்த் குடும்பத்தினரை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான ராஜீவ் துபேயுடையது (உரிமம்பெற்றது) என தெரியவந்தது.
இதையடுத்து அவரையும்,அவரது மனைவியான ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி மது துபேயையும் யானைகவுனி போலீஸார் சென்னை அழைத்து வந்து தனி இடத்தில் வைத்து விசாரித்தனர். அப்போது, “கொலை தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது, நட்பு ரீதியில்தான் அவர்கள் எனது காரை எடுத்துச் சென்றனர். அதற்குள் நான் துப்பாக்கியை வைத்திருந்தேன். அதை எடுத்துதான் கொலைக்கு பயன்படுத்தியுள்ளனர்” என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், முன்னுக்குப் பின் முரணாக பல்வேறு விஷயங்களை ராஜீவ் துபே கூறியுள்ளார். இதையடுத்து அவரைபோலீஸார் நேற்று கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட மற்றொரு துப்பாக்கி (கள்ள துப்பாக்கி) புனே அகமத் நகர் காட்டுப்பகுதியிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கொலைக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும், சிறையில் உள்ள சித்தல் குமாரின் மனைவி ஜெயமாலா, அவரின் சகோதரர் விலாஷ், கூட்டாளி ராஜூ சிண்டே ஆகியோரை 10 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி போலீஸார் ஜார்ஜ்டவுண் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளனர். மனு மீதானவிசாரணை விரைவில் நடைபெற உள்ளது.