தமிழகம்

நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலித்த அதிமுக கூட்டணி மீதான கோபம் மக்களிடம் இன்னும் உள்ளது: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கருத்து

செய்திப்பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தலை யொட்டி, ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற திமுகவின் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நேற்று நடைபெற்ற, தஞ்சாவூர் வடக்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

நான் பிரச்சாரத்துக்கு செல் லும் இடங்களில் காவல் துறையினர் என்னை தீவிரவாதி போல சுற்றி வளைத்து கைது செய்கின்றனர். இரவு வரை திருமண மண்டபங்களில் வைத்திருக்கின்றனர்.

அதிமுக ஆட்சிக்கு எதிராக, ஊழலுக்கு எதிராக, பாசிச ஆட்சிக்கு எதிராக இந்த 100 நாள் பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆனால், உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ அரசு விழாவில் தேர்தல் கூட்டணி குறித்து பேசுகிறார். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியை தமிழக மக்கள் துரத்தி துரத்தி அடித்தனர். நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலித்த அந்த கோபம் தமிழக மக்களிடம் இன்னும் இருக்கிறது. அதை மக்களிடம் பார்த்து வருகிறேன் என்றார்.

தொடர்ந்து, கும்பகோணம் திமுக அலுவலகத்தில் 25-க்கும் மேற்பட்ட திருநங்கைகளிடம் கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலின், பின்னர் பாபநாசம் அருகே சக்கரப்பள்ளியில் இஸ்லாமிய ஜமாத்தார்களிடமும், திருவை யாறில் விவசாயிகளிடமும், தஞ்சாவூரில் வீணை தயாரிப் பாளர்கள் மற்றும் வணிகர்களிடமும் ஆலோசனை நடத்தியதுடன் அவர்களது குறைகளை கேட்டறிந் தார்.

SCROLL FOR NEXT