இடமிருந்து வலமாக ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா 
தமிழகம்

திருப்பரங்குன்றத்தில் நிற்பது தந்தையா? மகனா?- அதிமுகவில் சட்டப்பேரவைத் தேர்தல் வேட்பாளர் பஞ்சாயத்து தொடங்கியது

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

அதிமுகவில் தற்போதே சட்டப்பேரவைத் தேர்தல் வேட்பாளர் பஞ்சாயத்து தொடங்கியுள்ளது. திருப்பரங்குன்றத்தில் ராஜன் செல்லப்பா போட்டியிடுவதற்கு தயாராகி வந்தநிலையில் தற்போது அவரது மகனும் போட்டிக்கு தயாராகிவருவதாக தகவல் பரவுகிறது.

மதுரை அதிமுகவில் மாநகர, புறநகர் கிழக்கு மற்றும் புறநகர் மேற்கு ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இதில், புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் மேயரும், தற்போதைய வடக்கு தொகுதி எம்எல்ஏவுமான விவி.ராஜன் செல்லப்பா உள்ளார்.

இவரது மாவட்ட கட்டுப்பாட்டில் திருப்பரங்குன்றம், மேலூர், கிழக்கு தொகுதிகள் உள்ளன. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜன் செல்லப்பாக திருப்பரங்குன்றம் தொகுதி கேட்டிருந்தார். ஆனால், அவருக்கு முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் ‘சீட்’ வழங்கப்படவில்லை. அன்பின்னர், கடைசி நேரத்தில் வடக்கு தொகுதிக்கு வேட்பாளராக அறிவித்த எம்.எஸ்.பாண்டியனை மாற்றிவிட்டு அதற்குப் பதிலாக ராஜன் செல்லப்பா அறிவிக்கப்பட்டார்.

தனக்கான எந்தத் தேர்தல் களப்பணியும், தயாரிப்பும் இல்லாமல் முழுக்க முழுக்க அரசு ஊழியர்கள், படித்தவர்கள், உயர் வகுப்பினர் வசிக்கும் வடக்கு தொகுதியில் ராஜன் செல்லப்பா போட்டியிட்டார். அதற்கு முன் அவர் கடந்த முறை மேயராக இருந்ததால் அவர் மீது வடக்கு தொகுதியில் இயல்பான அதிருப்தியும் இருந்தது. அதனால், அவர் வெற்றிப்பெறுவதே சிரமம் எனக்கூறப்பட்டது. ஆனால், வெற்றிப்பெற்று எம்எல்ஏ ஆனார்.

இருப்பினும், அவர் எதிர்பார்த்த அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. ஏற்கெனவே மதுரை மாவட்டத்தை சேர்ந்த செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் அமைச்சர்களாக இருப்பதால் இவருக்குக் கடைசி வரை இந்த ஆட்சியில் அமைச்சர் பதவி வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனது மாவட்டத்திற்குட்பட்ட தனக்கு தனிப்பட்ட செல்வாக்குள்ள திருப்பரங்குன்றம் தொகுதியில் நிற்க ராஜன் செல்லப்பாக தயாராகி வருவதாக கூறப்பட்டது அதற்காக கடந்த 6 மாதமாகவே தொகுதி முழுவதும் பூத் வாரியாக தேர்தல் களப்பணிகளை சத்தமில்லாமல் மேற்கொண்டுள்ளார்.

ராஜ் சத்தியன்

தற்போது திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுகவைச் சேர்ந்த டாக்டர் சரணவன், இடைத்தேர்தலில் வெற்றிப்பெற்று எம்எல்ஏ ஆனார். அவர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவதற்கு தயாராகி வருகிறார். ராஜன் செல்லப்பா வேறு தொகுதிக்கு தாவுவதால் அவர் எம்எல்ஏவாக உள்ள வடக்கு தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ ராஜாங்கம், எம்எஸ்.பாண்டியன் ஆகியோர் ‘சீட்’ கேட்டு வருகின்றனர். சென்ற முறை நழுவிய ‘சீட்’ வாய்ப்பை இந்த முறை எப்படியும் பெற்றுவிட வேண்டும் என்ற வைராக்கியத்தில் எம்எஸ்.பாண்டியன் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆதரவுடன் முயற்சி செய்து வருகிறார்.

தற்போது திடீர் திருப்பாக ராஜன் செல்லப்பா, தனக்கு பதிலாக திருப்பரங்குன்றம் தொகுதியில் தனது மகன் ராஜ் சத்தியனை நிறுத்த ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ராஜ் சத்தியன், ஏற்கெனவே கடந்த மக்களவைத் தேர்தலில் மதுரை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். எம்.பி தேர்தலில் நழுவிய மகனின் வெற்றி வாய்ப்பை, சட்டப்பேரவைத் தேர்தலில் கனிய வைக்க ராஜன் செல்லப்பா முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதுபோல், மதுரை மத்திய தொகுதி அல்லது கிழக்கு தொகுதியை முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் கேட்பதாகக் கூறப்படுகிறது. தெற்கு தொகுதியை சரவணன் எம்எல்ஏ கேட்பதாகக் கூறப்படுகிறது. செல்லூர் கே.ராஜூ தொகுதி மாறி தெற்கில் போட்டியிட்டால் சரவணன் எம்எல்ஏவுக்கு மீண்டும் ‘சீட்’ கிடைப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

அமைச்சர் ஆர்பி.உதயகுமார், சென்ற முறை போட்டியிட்ட திருமங்கலத்திலே போட்டியிடுவதற்கு தொகுதியை தயார்செய்து வருகிறார். கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட ராஜன் செல்லப்பா ஆதரவாளர் வழக்கறிஞர் ரமேஷ் முயற்சி செய்து வருகிறார். சோழவந்தான், மேலூர், உசிலம்பட்டி உள்ளிட்ட மற்ற தொகுதிகளிலும் அதிமுக நிர்வாகிகள் ஒவ்வொரு தொகுதியை குறிவைத்து தற்போதே காய் நகர்த்திக் கொண்டிருக்கின்றனர்.

SCROLL FOR NEXT