நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து கடலூருக்கு 150 பேர் கொண்ட 6 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் வந்துள்ளனர்.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை புயலாக மாறியுள்ளது. இதற்கு நிவர் புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் மரக்காணத்துக்கும், காரைக்காலுக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் விழுப்புரம், கடலூர், நாகை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் புயல் காற்று அடிக்கும், பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனையொடுத்து கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி மாவட்டத்தில் புயல், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். சம்பந்தப்பட்ட பகுதி பொறுப்பு அதிகாரிகள் அந்தந்தப் பகுதியில் தங்க வேண்டும், மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி கடலூர், சிதம்பரம், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு கடலோர கிராமங்களில் பொதுமக்கள் தங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு மையங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று (நவ.23) அரக்கோணத்தில் இருந்து கடலூருக்குத் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் வந்துள்ளனர். உதவி கமாண்டர் மனோஸ் பிரபாகரன் தலைமையில் ஆய்வாளர்கள் நந்தகுமார், மாரிகனி, விஜயகுமார், ரோகித்குமார், மண்டல், உமேஷ்சந்த் மற்றும் வீரர்கள் 150 பேர் கொண்ட 6 குழுக்கள் வந்துள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 25 பேர் உள்ளனர். இதில் 3 குழுக்கள் கடலூரிலும், 3 குழுக்கள் சிதம்பரத்திலும் தங்க வைக்கப்பட உள்ளன.