தென்மேற்கு மற்றும் அருகிலுள்ள தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலை கொண்டு வலுப்பெற்றுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னைக்கு 740 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. அது வலுப்பெற்று புயலாக மாறி (நிவர்) நாளை மறுநாள் பிற்பகலில் காரைக்கால் மற்றும் தமிழ்நாடு கடற்கரை அருகே கரையைக் கடக்க உள்ளதாக பேரிடர் மேலாண்மை முகமை எச்சரித்துள்ளது.
நேற்று முன்தினம் தெற்கு மற்றும் வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நேற்று தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டிருந்தது. அடுத்த 24 மணிநேரத்தில், காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, சென்னையின் தென்கிழக்கில் 740 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.
அதனை அடுத்த 24 மணி நேரத்தில் புயலாகவும் (நிவர்) வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 25-ம் தேதி பிற்பகலில் காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே கரையைக் கடக்கக் கூடும் எனத் தெரிவித்துள்ளது.
24 மற்றும் 25 தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிக மழைப்பொழிவு இருக்கும் எனவும், 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் தென்கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமாவிலும், 26-ம் தேதி தெலங்கானாவிலும் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.
25-ம் தேதி புயல் கரையைக் கடக்கும்போது பொதுமக்கள் வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இருக்க பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது. மருந்துப் பொருட்கள், உணவுப் பொருட்கள், தீப்பெட்டி, மெழுகுவர்த்தி உள்ளிட்ட பொருட்களைச் சேகரித்து வைத்துக்கொள்ள எச்சரிக்கப்பட்டுள்ளது.