கோவை கருமத்தம்பட்டியில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ். மேடையில், மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர்.படம்: ஜெ.மனோகரன் 
தமிழகம்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட காங். தொண்டர்கள் உழைக்க வேண்டும்: மாநிலப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட காங்கிரஸ் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தமிழகப்பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கூறினார்.

கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கருமத்தம்பட்டியில் விவசாயிகள் பாதுகாப்பு மாநாடு நேற்று நடைபெற்றது. இதில், தமிழகப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் பேசியதாவது: மக்கள் பிரச்சினைக்காக போராடுவதே காங்கிரஸின் கொள்கை. மதத்துக்காக கட்சி நடத்தவில்லை.

பேரிடர் காலத்தில், மக்களிடம்கருத்து கேட்காமல் வேளாண் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மாநிலங்களை வஞ்சிக்கும் மத்தியஅரசுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களின் குரல்வளை நெறிக்கப்படுகிறது. வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும். ஆட்சி மாற்றத்துக்காக காங்கிரஸ் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசும்போது, "சில தோல்விகளை மட்டும் சுட்டிக்காட்டி, கட்சித்தலைமையை விமர்சிப்பது சரியல்ல. ஜனநாயகத்தில் வெற்றி, தோல்விதான் சகஜமானது. வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பது குறித்து சட்டத்தில் இடம்பெறவில்லை.

காங்கிரஸ் ஆட்சியில் ரூ.75,000 கோடியும், தமிழகத்தில் திமுக ஆட்சியில் ரூ.7,000 கோடி கடனும் ரத்து செய்யப்பட்டது. ஆனால், தற்போது எத்தனை கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது?

காங்கிரஸ் இந்து மதத்துக்கு எதிரானது போலவும், பாஜக ஆதரவாக இருப்பது போலவும் சில ஊடகங்கள் தவறாகச் சித்தரிக்கின்றன. உண்மையான கடவுள் பக்தி இருந்தால், வேல் இல்லாமல், முருகன் சிலையைத்தான் கொண்டுசெல்ல வேண்டும்.

திமுக-காங்கிரஸ் கட்சிகள் சண்டையிட்டுக் கொள்ள வேண்டுமென சில ஊடகங்கள் ஆசைப்படுகின்றன. நாங்கள் கொள்கை ரீதியாக இணைந்துள்ளோம். சிலவேறுபாடுகள் இருந்தாலும், மதச்சார்பின்மை என்ற கோட்பாட்டில், திமுக முதல் விடுதலை சிறுத்தைகள் கட்சி வரை இணைந்துள்ளன. இது வெற்றிக் கூட்டணி. தேர்தலின்போது எங்களுக்குத் தேவையான தொகுதிகளைக் கேட்டுப் பெறுவோம். காங்கிரஸ் கட்சி சுயமரியாதை கொண்ட கட்சி. மோடியை வீழ்த்த ராகுல் காந்தியால்தான் முடியும். காங்கிரஸின் ஏர் கலப்பை பேரணிக்கு காவல் துறை அனுமதிக்கவில்லை என்றாலும், தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும்" என்றார்.

கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். வடக்கு மாவட்டத் தலைவர் வி.எம்.சி.மனோகரன் வரவேற்றார். மாநில செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் தொடங்கி வைத்தார். பின்னர் நடைபெற்ற ஏர் கலப்பை பேரணியில் காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT