மத்திய அரசு மானியத்தை நிறுத்தியபோதிலும் பொது விநியோகத் திட்டத்தில் கிலோ ரூ.30-க்கு பருப்பு வகைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரி வித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
துவரம் பருப்பு விலை 4 மடங்கு உயர்ந்துள்ளதாக கூறியுள்ள திமுக தலைவர் கருணாநிதி, தமிழக அரசால் 500 டன் துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ.110-க்கு வழங்கப்பட உள்ளதை விமர்சித்துள்ளார்.
மத்திய அரசு இறக்குமதி செய்த 5 ஆயிரம் டன்னில் தமிழகத்துக்கு 500 டன் துவரையை பெற்று, ஒரு கிலோ ரூ.110-க்கு கூட்டுறவு மற்றும் அமுதம் அங்காடிகள் மூலம் வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. ஆனால், கனடா துவரம்பருப்பு ஒரு மாதத்துக்கு 13,500 டன்னும், உளுத்தம் பருப்பு 7,000 டன்னும் பெறப்பட்டு, சிறப்பு விநியோக திட்டத்தின்கீழ் ஒரு கிலோ ரூ.30-க்கு வழங்கப்படுகிறது. மேலும் 1.50 கோடி லிட்டர் பாமாயில் பாக்கெட் ஒரு லிட்டர் ரூ.25 வீதம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
இதையெல்லாம் மறைத்து விட்டு, 500 டன் துவரம்பருப்பு மட்டும்தான் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக கருணாநிதி கூறியுள்ளார். முந்தைய திமுக ஆட்சியில் ரூ.52-க்கு பருப்பு கொள்முதல் செய்து ரூ.30-க்கு விற்றனர். அப்போது மத்திய அரசு பருப்பு மற்றும் பாமாயிலுக்கு மானியம் வழங்கியது. ஆனால், 2012-ல் மானியம் நிறுத்தப்பட்டு விட்டது.
அதேநேரம் பருப்பு உற்பத்தி யாகும் மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் விளைச்சல் குறைந்து விலையும் உயர்ந்தது. இதை கணக்கில் கொள்ளாமல் நிதிச் சுமையை தமிழக அரசே ஏற்று ரூ.30-க்கே தொடர்ந்து பருப்பு விநியோகிக்கப்படு கிறது. தமிழக அரசு சார்பில் ‘விலை நிலைப்படுத்தும் நிதியம்’ ரூ.100 கோடியில் ஏற்படுத்தப்பட்டு, விலை ஏற்றத்தின்போது, உற்பத்தி மையங்களில் இருந்து பொருட்களை கொள்முதல் செய்து அமுதம் மற்றும் கூட்டுறவு சிறப்பங்காடிகள் மூலம் குறைந்த விலையில் விற்கப் படுகிறது. இவ்வாறு அறிக் கையில் காமராஜ் கூறியுள்ளார்.