வேடந்தாங்கல் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் போதிய மழையில்லாததால், நீர்வரத்து இன்றி காணப்படும் சரணாலய ஏரியை பார்த்து பறவைகள் ஏமாற்றத்துடன் வேறு இடத்துக்கு செல்கின்றன.
செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கல் கிராமத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 73 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில், பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுதோறும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் சீசன் தொடங்குவது வழக்கம். பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான பறவைகள் இனப்பெருக்கத்துக்காக சரணாயலத்துக்கு வருகின்றன. இங்கு பறவைகள் வசிக்க ஏற்ற வகையில் ஏராளமான மரங்கள் உள்ளன.
மரக்கிளைகளில் கூடுகட்டி முட்டையிட்டு, இனப்பெருக்கம் செய்யும் பறவைகள் குஞ்சுகளுடன் மீண்டும் தாய்நாடு திரும்புவது வழக்கம். பறவைகளை கண்டு ரசிப்பதற்காக, உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து சுற்றுலா பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பறவை ஆர்வலர்கள் ஏராளமானோர் வந்து செல்வர்.
இந்நிலையில், வேடந்தாங்கல் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழையில்லாததால் சரணாலய ஏரிக்கு நீர்வரத்து இன்றி பறவைகள் வரத்தும் குறைந்துள்ளது. எனினும், ஏரியின் உள்ளே அமைந்துள்ள மரங்களில் ஆங்காங்கே பறவைகள் வசிப்பதை காண முடிகிறது. நல்ல மழை பெய்தால் மட்டுமே ஏரியில் தண்ணீர் நிரம்பி அதிகளவில் பறவைகளை காணமுடியும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, வேடந்தாங்கல் சரணாலய வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, "வடகிழக்கு பருவமழை பெய்தாலும், ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழையில்லாததால் நீர்வரத்து இல்லை. வளையபுத்தூர் ஏரி நிரம்பினால் உபரிநீர் சரணாலய ஏரிக்கு அதிகளவில் வரும். அந்த ஏரிக்கும் தற்போதுதான் குறைந்த அளவில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. சரணாலய ஏரியில் தற்போது 25 சதவீதம் மட்டுமே தண்ணீர் உள்ளதால் ஏரியை பார்வையிடும் வலசை பறவைகள், ஏமாற்றத்துடன் நீர் நிலைகளை தேடி வேறு பகுதிக்கு செல்லும் நிலை உள்ளது" என்றனர்.