முதல்வர் நாராயணசாமி: கோப்புப்படம் 
தமிழகம்

ரவுடிகளை ஊக்குவித்து வளர்த்தார்: ரங்கசாமி மீது புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

செ.ஞானபிரகாஷ்

ரவுடிகளை ஊக்குவித்து தனிப்பட்ட முறையில் ரங்கசாமி வளர்த்ததாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் கடந்த ஒரு மாதகாலமாக அதிகளவில் கொலை சம்பவங்கள் நிகழத்தொடங்கியுள்ளன. குறிப்பாக, மேட்டுப்பாளையம் பகுதியில் அதிக கொலைகள் நிகழ்ந்தன. இச்சூழலில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஏ.கே.டி.ஆறுமுகம் மீது தாக்குதல் இரு நாட்களுக்கு முன்பு நடந்தது. இதையடுத்து, காவல்துறை அதிகாரிகளை அழைத்து முதல்வர் நாராயணசாமி கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்ஸாவுடன் ஆலோசித்தார்.

இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று (நவ. 22) மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் ஏ.கே.டி.ஆறுமுகம் ரவுடி கும்பலால் தாக்கப்பட்டுள்ளார். இதில், மிகப்பெரிய சதி பின்னணி உள்ளது. காவல்துறை விசாரிக்கிறது. அவருக்குப் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் கொலை புரிவோரை அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் ஊக்குவிக்கிறார்கள். மேட்டுப்பாளையம் பகுதியில் தொடர் கொலைகளின் பின்னணியில் அப்பகுதியிலுள்ள சில அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள்.

தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரான ரங்கசாமி, முன்பு முதல்வராக இருந்தபோது சகஜமாக கொலைகள் நடந்தன. பல கொலை, கொள்ளை வழக்குகளை நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு கண்டறிந்தோம்.

ரங்கசாமி: கோப்புப்படம்

அவரது ஆட்சியில் 19 வயது சிறுவன் வெட்டப்பட்டு சாக்கு மூட்டையில் போடப்பட்டு ஊசுடு ஏரியில் தூக்கி எறிந்ததன் பின்னணியில் யார் இருந்தார்கள் என்பது மக்களுக்குத் தெரியும். வழக்கை மூடி மறைத்துள்ளனர். அதை தோண்டி எடுத்து விசாரணை தொடங்கியுள்ளோம்.

ரங்கசாமி முதல்வராக இருந்தபோது ரவுடிகள் சட்டப்பேரவையில் இருந்தனர். ரவுடிகளை ஊக்குவித்து தனிப்பட்ட முறையில் ரங்கசாமி வளர்த்தார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஆறுமுகம் வழக்கில் தாக்குதல் நடத்தியோர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அரசியல் பின்னணியை காவல்துறை கண்டுபிடிக்க வேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசியலில் எதிர் நிலையில் உள்ளோரை ஒழிக்க சிலர் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். அரசியல் பழிவாங்கும் நோக்கம் கொண்டோரை அரசு விட்டுவைக்காது. அரசியலில் கருத்து வேறுபாடு இருக்கலாம். விரோதம், குரோதம் இருக்கக்கூடாது. அவ்வியாதி புதிதாக புதுச்சேரியில் வந்துள்ளது".

இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT